2014-05-13 15:46:48

விவிலியத்
தேடல் மினா நாணய உவமை : பகுதி - 1


RealAudioMP3 இயேசுவின் உவமைகளை அடிப்படையாகக் கொண்டு, நாம் மேற்கொண்ட விவிலியத் தேடல் பயணத்தில், இதுவரை 12 உவமைகள் வழியே நம்மை வழிநடத்திய இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். இன்று 13வது உவமையான 'மினா நாணய உவமை'யில் நம் பயணத்தைத் துவக்குகிறோம். லூக்கா நற்செய்தி 19ம் பிரிவில் 12 முதல் 27 முடிய உள்ள 16 இறைச் சொற்றொடர்களில் இந்த உவமை சொல்லப்பட்டுள்ளது. இயேசு இவ்வுவமையைக் கூறியச் சூழலை, நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம் கூறியுள்ளார்: இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். (லூக்கா 19:11)

இவ்வார்த்தைகளைக் கேட்டதும், நம் நினைவு பின்னோக்கிச் செல்கிறது. லூக்கா நற்செய்தியில், கதை வடிவில் அமைந்த உவமைகளில் நம் பயணத்தைத் துவக்கியபோது, முதல் கதையாக நாம் தெரிவு செய்தது - 'நல்ல சமாரியர்' உவமை. லூக்கா நற்செய்தி 10ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்த உவமையின் பின்னணியைப் பற்றி நாம் சிந்தித்தபோது, லூக்கா நற்செய்தி, 9ம் பிரிவில், 51வது இறைச்சொற்றொடர் நம் கவனத்தை ஈர்த்தது:
லூக்கா 9: 51-52
இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார்.

லூக்கா 9ம் பிரிவில் எருசலேம் நோக்கி இயேசு ஆரம்பித்த பயணம், தற்போது 19ம் பிரிவில் முடிவடையும் நிலையில் உள்ளதென்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடுகிறார். எருசலேம் நோக்கி இயேசு மேற்கொண்ட இப்பயணத்தின் போது அவர் கூறிய 12 அற்புதமான உவமைகள் நம் சிந்தனைகளைத் தூண்டி வந்துள்ளன. 12வது உவமையாக, கடந்த 7 வாரங்கள் நம் சிந்தனைகளைத் தூண்டிய உவமை - 'பரிசேயரும் வரி தண்டுபவரும்' என்ற உவமை. இந்த உவமையின் ஒரு சில எண்ணங்களை மீண்டும் சிந்திக்க ‘மினா நாணய உவமை’ கூறப்பட்டச் சூழல் நம்மை அழைக்கிறது.

பரிசேயரும், வரிதண்டுபவரும் இறைவனிடம் வேண்ட கோவிலுக்குச் சென்றனர் என்று இயேசு அந்த உவமையைத் துவக்கியதும், கதையின் முடிவை மக்கள் தீர்மானித்துவிட்டனர் என்று சிந்தித்தோம். அதாவது, நேர்மையுடன், புண்ணிய வாழ்வு வாழ்ந்த பரிசேயர், இறைவனின் ஆசீரைப் பெற்றார்; மக்களை ஏமாற்றி வாழ்ந்த வரிதண்டுபவர் இறைவனின் சாபத்தைப் பெற்றார் என்று தன் கதையின் முடிவில் இயேசு கூறுவார் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இயேசுவோ அவர்கள் எதிர்பார்ப்பை முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப் போட்டார். "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்" (லூக்கா 18:14) என்று இயேசு கதையை முடித்தார்.
இறைவனின் ஆசீரைப் பெற்றவர் வரிதண்டுபவர் என்ற அதிர்ச்சி முடிவை தன் உவமையில் கூறிய இயேசு, தொடர்ந்து அதை தன் வாழ்விலும் நடைமுறைப் படுத்தினார். இதனை, நற்செய்தியாளர் லூக்கா, ஒரு நிகழ்வாக, 'மினா நாணய உவமை'க்கு முன்னதாக, 19ம் பிரிவின் துவக்கத்தில் கூறியுள்ளார். அதுதான், இயேசு, சக்கேயுவைச் சந்திக்கும் நிகழ்வு. "சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுபவருக்குத் தலைவர்" (லூக்கா 19:2) என்று லூக்கா சக்கேயுவை விவரிக்கிறார்.

இயேசுவைச் சுற்றியிருந்த கூட்டத்தில், அவரைக் காணமுடியாத அளவு குள்ளமாக இருந்த சக்கேயு, இயேசுவைக் காணுமாறு மரமேறினார் என்பதை நாம் அறிவோம். மரமேறி அமர்ந்திருந்த சக்கேயுவின் வீட்டிற்கு, இயேசு, தானாகவே முன்வந்து, அழையாத விருந்தினராய் சென்றார். 'பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்' (லூக்கா 19:7) என்ற முணுமுணுப்பை இயேசு பொருட்படுத்தியாகத் தெரியவில்லை. விருந்தின் இறுதியில் சக்கேயு தன் மனமாற்றத்தை அறிக்கையிட்டுச் சொன்னதும், இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" என்று சொன்னார். (லூக்கா 19: 9-10)
வரிதண்டுபவரே இறைவனுக்கு உகந்தவராக வீடு திரும்பினார் என்று இயேசு கூறிய உவமையின் வரிகளை 18ம் பிரிவில் பதிவு செய்துள்ள லூக்கா, தொடர்ந்து, அடுத்தப் பிரிவில், வரிதண்டுபவர் தலைவனான சக்கேயுவின் வீட்டுக்கே இயேசு சென்று அவரை இறைவனுக்கு ஏற்புடையவராக மாற்றினார் என்பதைச் சொல்கிறார். இயேசு தன் வார்த்தைகளை வாழ்வாக்கினார் என்பதை, நான்கு நற்செய்தியாளர்களும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்.

சக்கேயுவை இயேசு சந்தித்த இந்நிகழ்வின் ஆரம்ப வரிகள் என் கவனத்தை ஈர்த்தன. "இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்" (லூக்கா 19:1) என்று நற்செய்தியாளர் லூக்கா இந்நிகழ்வைத் துவக்குகிறார். இந்நிகழ்வின் இறுதியில், "இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார்" (லூக்கா 19:11) என்ற வார்த்தைகளைக் காண்கிறோம். இவ்விரு இறைச் சொற்றொடர்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, இயேசு, எரிகோவிலிருந்து எருசலேமுக்குச் செல்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறோம்.
எருசலேம், எரிகோ என்ற இரு நகர்களின் பெயர்களைக் கேட்டதும், இயேசு கூறிய புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்' உவமை நினைவுக்கு வருகிறது. அந்த உவமையின் துவக்கத்தில், "ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார்" (லூக்கா 10:30) என்று வாசிக்கிறோம்.

எருசலேமுக்கும் எரிகோவுக்கும் இடையில் கள்வர் கையில் அகப்பட்டு, காயப்பட்ட ஒருவருக்கு சமாரியர் ஒருவர் ஆற்றியப் பணியை தன் உவமையில் இயேசு புகழ்ந்தார். இப்போது, வாழ்வில் அவரே 'நல்ல சமாரியாரா'க மாறுகிறார். எரிகோவில் ஒரு கள்வராக வாழ்ந்து மக்கள் பணத்தை கொள்ளையடித்துவந்த சக்கேயுவை இயேசு குணமாக்குகின்றார். அத்துடன், மக்களின் கண்டனங்களால், சாபங்களால் காயப்பட்டுக் கிடந்த சக்கேயுவை இயேசு என்ற நல்ல சமாரியர் குணமாக்குகிறார்.

வரிதண்டுபவரைப் பற்றிய ஓர் உவமையையும், வரிதண்டுபவர் தலைவரான சக்கேயுவைப் பற்றிய ஒரு நிகழ்வையும் பதிவு செய்துள்ள நற்செய்தியாளர் லூக்கா, தொடர்ந்து நமக்கு வழங்குவது 'மினா நாணய உவமை'.
"இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார்" (லூக்கா 19:11) என்று லூக்கா, இந்த உவமையின் ஆரம்பத்தில் சொல்லும் வரிகள், எருசலேம் நகரை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது.
கோவிலைக் கொண்டிருந்ததால், எருசலேம், கடவுளின் நகராகக் கருதப்பட்டது. அதுவே அரசனுக்கு உரிய தலைநகராகவும் கருதப்பட்டது. எனவே, இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரை, எருசலேம் நகர், கடவுளுக்கும், அரசனுக்கும் உரிய உறைவிடமாகக் கருதப்பட்டது. கடவுளும் அரசனும் ஆன இயேசு, எருசலேமில் நுழைவதை வெறும் அரசனின் உருவில் மக்கள் காண முனைந்தனர் என்பதை லூக்கா இவ்வுவமையின் அறிமுக வரிகளில் இவ்வாறு கூறியுள்ளார்:
இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். (லூக்கா 19:11ஆ)
இறையாட்சி என்பது, இவ்வுலகைச் சார்ந்தது அல்ல, மறு உலகைச் சார்ந்தது என்பதையும், அந்த அரசுக்குத் தேவையான பொறுப்புணர்வுடன் வாழவேண்டும் என்பதையும் எடுத்துரைக்கும் ஒரு முயற்சியாக, இயேசு 'மினா நாணய உவமை'யைச் சொல்கிறார்.

இந்த உவமையை ஒத்த 'தாலந்து உவமை'யை நாம் மத்தேயு நற்செய்தி 25ம் பிரிவில் (மத்தேயு 25: 14-30) காண்கிறோம். ‘தாலந்து உவமை’, வெறும் உவமையாக மட்டும் கூறப்பட்டுள்ள வேளையில், 'மினா நாணய உவமை' வரலாறு கலந்த ஒரு கதையாக ஒலிக்கிறது என்று விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர். இவ்வுவமையை இயேசு துவக்கிய விதம், இதனை அன்றைய இஸ்ரயேல் வரலாற்றுடன் இணைக்கத் தூண்டுகிறது. "உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார்" (லூக்கா 19: 12) என்று இயேசு இந்த உவமையை ஆரம்பித்ததும், சூழ இருந்த மக்கள், தங்கள் மத்தியில் நிகழ்ந்த வரலாற்றை நினைவுகூர்ந்திருப்பர். அந்த வரலாறு இதுதான்...

பதவி வெறி பிடித்த ஏரோது மன்னனை நாம் அறிவோம். குழந்தை இயேசுவைக் கொல்வதற்காக, பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். (மத்தேயு 2:16) மன்னன் ஏரோதுக்கு அந்திப்பா, அர்க்கெலா, பிலிப்பு என்ற மூன்று மகன்கள் உண்டு. மன்னன் ஏரோது இறந்தபின், அவரிடம் விளங்கிய பதவி வெறி அவரது மகன்களை ஆட்டிப் படைத்தது. அவரது அரியணையில் ஏறும் உரிமை யாருக்கு என்ற குழப்பம் எழுந்தது. ஏரோது மன்னன் ஆறு உயில்களை எழுதியதாகவும், எனவே பெரும் குழப்பம் நிலவியதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்திப்பா, அர்க்கெலா இருவரும் அரியணைக்கு உரிமை கொண்டாடவே, அர்க்கெலா, உரோம் நகருக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கிருந்த சீசரிடம், தன்னை அரசனாக்கும் ஆணையைப் நேரில் பெற்று வரச்சென்றார். அவர் புறப்பட்டுச் சென்றதும், அர்க்கெலாவை மன்னராக்கக் கூடாது என்பதை, சீசரிடம் எடுத்துக் கூற, எருசலேமில் இருந்த குல முதல்வர்கள் 50 பிரதிநிதிகள் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவை உரோம் நகர் அனுப்பி வைத்தனர். சீசர், அர்க்கெலாவை மன்னராக நியமிக்கவில்லை, ஆனால், அவரை யூதேயாவின் ஆளுநராக நியமித்தார். கலிலேயாவில் அந்திப்பாவும், யோர்தானில் பிலிப்பும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். ஆளுநராக யூதேயாவுக்குத் திரும்பிய அர்க்கெலா, தனக்கு எதிராக பிரதிநிதிகளை அனுப்பிய நகரப் பெரியோரை பழி தீர்த்தார் என்பது வரலாறு. இத்தகைய வரலாற்றை நினைவுபடுத்தும் இவ்வுவமை வழியாக இயேசு கூற விழையும் பாடங்களை நம் அடுத்தத் தேடல்களில் சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.