2014-05-13 18:07:41

மிக நீண்ட காலம் ஆட்சி செய்யும் தாய்லாந்து மன்னருக்கு புதியப் புனிதர்களின் புனிதப் பொருட்கள் பரிசு


மே,13,2014. அண்மையில் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட இரு திருத்தந்தையர்களுடன் நட்புறவு பாராட்டிய தாய்லாந்து மன்னர், Bhumibol Adulyadej அவர்களை, தாய்லாந்து ஆயர்கள் இஞ்ஞாயிறன்று அவரது அரசு இல்லத்தில் சந்தித்து, புதியப் புனிதர்களின் புனிதப் பொருட்களை அவருக்கு அளித்துள்ளனர்.
தாய்லாந்தின் 10 மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள் ஒன்றிணைந்து, கர்தினால் Michael Michai Kitbunchu அவர்களின் தலைமையில், மன்னர் Adulyadej அவர்களைச் சந்தித்தபோது, புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் தோலின் ஒரு சிறு பகுதி அடங்கியப் பேழையையும், புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் இரத்தம் தோய்ந்த சிறு துணியையும் மன்னருக்குப் பரிசாக வழங்கினர்.
உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்யும் மன்னர் என்ற சாதனையுடன் 67 ஆண்டுகளுக்கு மேலாக தாய்லாந்து மன்னராக இருக்கும் 87 வயதான Adulyadej அவர்கள், புனிதர்களாக உயர்த்தப்பட்ட இரு திருத்தந்தையரையும் சந்தித்துள்ளார்.
6 கோடியே 50 இலட்சம் மக்களைக் கொண்ட தாய்லாந்து நாட்டில், 4 இலட்சம் கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.