2014-05-13 18:07:25

மதங்கள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு, மக்களை அமைதி நோக்கி ஊக்குவிப்பதே


மே 13,2014. இவ்வுலகில் மதங்கள் ஆற்றவேண்டிய முக்கியப் பங்களிப்பு, மக்களை அமைதி நோக்கி ஊக்குவிப்பதேயாகும் என உரைத்தார் திருப்பீட உயர் அதிகாரி கர்தினால் Jean-Louis Tauran.
'அமைதிக்கான கல்வி' என்ற தலைப்பில் ஜோர்டன் நாட்டில் ஏற்பாடுச் செய்யப்பட்ட கருத்தரங்கில், அமைதிக்கானப் பாதைகளில் மதத்தலைவர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்றிய மதங்களிடையே உரையாடல் பணியாற்றிவரும் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Tauran அவர்கள், வன்முறை என்பது வீரத்துவச்செயல் அல்ல, மாறாக, கண்மூடித்தனமான கோபவெறி என்பதால், முதலில் வன்முறைகள் ஒழிக்கப்படவேண்டும் என்றார்.
எச்சூழலிலும் வன்முறைகள் நியாயப்படுத்தப்பட முடியாதவை என்பது தெளிவாக்கப்படுவதுடன், மன்னிப்பு மற்றும் ஒப்புரவு மூலம் நம் எண்ணங்கள் தூய்மை பெறவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் கர்தினால் Tauran.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம் புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்திற்கு முன்னோடியாக, இக்கருத்தரங்கு, ஜோர்டனிலுள்ள இத்தாலியத் தூதரகம், ஐரோப்பிய அவையின் பிரதிநிதிக்குழு, ஜோர்டன் மன்னரின் மதங்களிடையே உரையாடல் கல்விக்கழகம் ஆகியவை ஏற்பாடுச் செய்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.