2014-05-12 16:13:27

வாரம் ஓர் அலசல் – குடும்பத்தைக் கோவிலாக்குவோம்(Int.Family Day May 15)


மே,12,2014. இசைத்துறையில் ஐம்பது ஆண்டுகள் அனுபவம் பெற்ற புகழ்மிக்க பாடகர் ஒருவர் ஒரு முக்கிய நகரத்தில் தனது இசைக் கச்சேரியை நடத்த விரும்பினார். தனது கச்சேரி சற்று வித்தியாசமாக இருக்கட்டும் என நினைத்து ஒரு புதிய பெண் பாடகர் ஒருவரையும் அதில் பாடுவதற்கு அழைத்தார். அந்த நாளும் வந்தது. மேடையில் பலவண்ண மின்விளக்குகள் மினுமினுக்க, இரசிகர்களின் பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் இருவரும் மேடையை நோக்கி நடக்கத் தொடங்கினர். பாதிவழியிலேயே அந்தப் புகழ்பெற்ற பாடகருக்கு கைகால்கள் நடுங்கத் தொடங்கின. அது கொஞ்சம் முற்றிப்போய் இலேசாக தடுமாறிவிட்டர் அவர். புதுப்பாடகி அவரைப் புரிந்துகொண்டு அவரைக் கைத்தாங்கலாகத் தாங்கிக் கொண்டார். பின்னர் அப்பாடகி கேட்டார்:”என்ன சார் இது? உங்களுக்கு ஐம்பது ஆண்டு அனுபவம். இப்படிப்போய் நடுங்கலாமா? என்னைப் பாருங்க, நான் புதுப்பாடகி. எவ்வளவு தெம்பாக வருகிறேன்” என்று. அதற்கு அப்பாடகர், “நீ புதுசுமா.. நீ 60 விழுக்காடு நன்றாக பாடினாலே போதும். ஆனால் நான் ரொம்பப் பழசு. நான் 200 விழுக்காடு நன்றாகப் பாடவேண்டும் என்று”.
எல்லா இடங்களிலும் எல்லாச் சூழல்களிலும் எதிர்பார்ப்பு. அதனால்தான் எதிர்பார்க்காதவர்கள் ஏமாற்றமடையமாட்டார்கள் என்று சொல்கிறார்கள். இன்று பல குடும்பங்களில் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து குடும்பங்கள் பிளவுபடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று எதிர்பார்ப்பு. எனது கணவர் எனது விருப்பப்படி நடக்கவில்லை, எனது மனைவி எனது விருப்பப்படி நடக்கவில்லை, பிள்ளைகள் சொல்பேச்சே கேட்பதில்லை, அவரவர் விருப்பப்படி நடக்கின்றார்கள் என்று பல குடும்பங்களின் புகார்களை, சாதாரணமாகக் கேட்க முடிகின்றது. கணவர் மனைவியருக்கிடையே ஏதேனும் ஒரு எதிர்பார்ப்பு நிறைவேறவில்லையெனில் வார்த்தைகள் வழுக்கி விழுந்து உறவுகளில் சில சில கீறல்கள் விழுந்துவிடுகின்றன. அதோடு, தனது கணவர் தன்னைப் பற்றி இப்படித்தான் எண்ணம் வைத்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பழுதடைந்துவிட்டாலும் உறவுகளில் சிக்கல்கள் ஏற்படும். சொற்பொழிவாளர் சுகி சிவம் சொல்கிறார்.....
குடும்பம் இறைவனால் அமைக்கப்பட்ட ஓர் அழகான அமைப்பு. இது, இறைவன் மனித குலத்துக்குத் தந்த ஓர் அரிய பரிசு. இந்தக் குடும்பம், உறவுகளின் சங்கிலிகளால் பின்னப்பட்டது. அதில் ஒரு வளையம் நலிவடைந்தால் ஒட்டுமொத்தக் குடும்பமும் நலிவடையும். ஒரு குடும்பத்தில் திடீரென ஓர் இழப்பு ஏற்பட்டால் அந்தக் குடும்பத்தின் தலையெழுத்தே பல நேரங்களில் மாறிவிடுகின்றது. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம். அதில் தந்தை திடீரென கார் விபத்தில் இறந்துவிட்டார். தனது பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தார். அவர்கள் நல்ல வேலையிலும் இருந்தார்கள். மகனுக்குத் திருமணத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். மணமகளும் தயார். ஆனால் அந்தத் தந்தையின் இறப்பால் இன்று அக்குடும்பத்தில் யாருமே திருமணம் செய்யவில்லை. ஆளுக்கொரு பக்கம் என உள்ளனர் பிள்ளைகள். கடந்த மார்ச் 3ம் தேதி மதியம் 12.30 மணிபோல் உரோமையிலிருந்த தமிழர்கள் ஒரு செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைந்தனர். இங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஒரு தமிழ்க் குடும்பத்தலைவி அன்று மரணமடைந்துவிட்டார் என்ற தொலைபேசி செய்திதான் வருத்தத்துக்குக் காரணம். அவருக்கு வயது 40தான். அவர்களுடைய குடும்பம் ஒரு நல்ல, பக்தியுள்ள குடும்பம். யார் உதவி கேட்டாலும் முகம்கோணாமல் உதவக்கூடியது அச்சிறு குடும்பம். இன்று அந்தக் குடும்பத்தலைவரும், 14 வயதான ஒரே மகனும் துயரத்தை வெளியில் சொல்ல முடியாமல் வாழ்ந்து வருகின்றனர்.
மனிதரிடம் பணமும், வசதியும் பெருகப் பெருக, தான் என்ற போக்கும் அவற்றின்கூடவே ஒட்டுண்ணிகளாக உள்ளன. இதனால் திருமணத்தைச் சுமையாய் நினைக்கும் இளையோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருமணமாகி ஒரு மாதத்திலேகூட பிரிந்துவிடும் தம்பதியரும் உள்ளனர். குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்துக்காக வருகின்ற தம்பதியரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் நிறுவனம் 2013ம் ஆண்டு டிசம்பரில் வெளியிட்ட புள்ளி விபரங்களில், உலகில் திருமணமுறிவுகள் அதிகம் இடம்பெறும் நாடுகளாக, லாத்வியா, செக் குடியரசு, லித்துவேனியா, ஹங்கேரி, சுவீடன் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. திருமணம் என்ற பந்தத்துக்குள் இணையாமல், சேர்ந்து வாழ்வோம், ஒத்துவராதபோது பிரிந்துவிடுவோம் என்ற போக்கு சாதாரணமாகி விட்டது. ஓரினச்சேர்க்கைத் திருமணங்களும் சில நாடுகளில் சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இயற்கைக்கு மாறான இந்த வாழ்வு, ஆண்பெண் திருமணத்துக்குச் சமமாகவும் நோக்கப்படுகின்றது. இத்தகைய நிலைகளால் வருங்கால சமுதாயம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கும்.
பரம்பரை பரம்பரையாகப் பேணி பாதுகாக்கப்பட்ட கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து தனிக்குடும்பமாகிவிட்டது. குடும்ப அமைப்புகள் சிதைந்து போனால் உலகில் உறவுகள் இல்லாமற்போகும். உறவுகள் அற்ற உலகில் வன்முறையும் சுயநலமுமே வாழ்க்கைமுறைகளாக மாறும் என்று அப்துல் ரஹ்மான் சொன்னார். கூட்டுக் குடும்பங்களுக்குச் சார்பாகவும், எதிராகவும் ஒரு தொலைக்காட்சி விவாதமேடை நிகழ்ச்சி நடந்தது. அதில் கூட்டுக்குடும்பங்களில் நல்ல வேலையில் இருப்போர் ஒரு மாதிரியும், குறைந்த ஊதியத்தில் இருப்போர் தரக்குறைவாகவும் நடத்தப்பட்டு வீட்டில் அதிகம் வேலைவாங்கப்படுகிறார் என ஒருவர் வாதத்தை முன்வைத்தார். ஆனால் இன்னொருவர், இன்று கூட்டுக்குடும்பங்கள் இல்லாததால் பிள்ளைகளின் வருங்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை அழகாகச் சொன்னார்....
படைப்பின் சிகரமாய் மனிதரைப் படைத்த இறைவன், மனிதரை ஆணும் பெண்ணுமாகத்தான் படைத்தார். உலகத்தைப் படைத்தபோதே கடவுள் குடும்பத்தையும் உருவாக்கிவிட்டார். உறுதியான குடும்பங்கள் அமைக்கப்பட வேண்டுமென்பதை கத்தோலிக்கத் திருஅவையும் இக்காலத்தில் அதிகமாக வலியுறுத்தி வருகின்றது. இந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடைபெறும் உலக ஆயர் மாமன்றங்கள் குடும்பங்கள் பற்றியே நடைபெறவுள்ளன. ஐக்கிய நாடுகள் நிறுவனம் இந்த 2014ம் ஆண்டை, அனைத்துலக குடும்ப ஆண்டின் 20வது ஆண்டு நிறைவாகச் சிறப்பித்து வருகிறது. 1994ம் ஆண்டில் உலகில் முதல் உலக குடும்ப ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டபோது, சமூக வாழ்வுக்கு குடும்பங்களே அடிப்படை என்பதை ஐ.நா. வலியுறுத்தியது. அதோடு, ஆண்டுதோறும் மே 15ம் தேதியை உலக குடும்ப தினமாகவும் கடைப்பிடிக்கிறது ஐ.நா. “குடும்பங்கள் என்றென்றும்” என்ற தலைப்பில் வருகிற வியாழனன்று இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் அனைத்துக் குடும்பங்களுக்கும் நல்வாழ்த்துக்ளைச் சொல்லும்வேளை, இலட்சிய குடும்பங்களைக் கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.
குடும்பம் ஒரு கோவில். இந்தக் கோவில் எனும் கட்டுமானத்தில் சேர்ந்து வாழ்வதில்தான் சிறப்பிருக்கிறது. விட்டுக்கொடுத்தலில்தான் மனப்பூர்வமான மகிழ்ச்சி இருக்கின்றது. உறவுகளுக்காக உதவிக்கரம் நீட்டுவதில்தான் உண்மையான அன்பின் நிறம் தெரிகிறது. சரியான புரிதலில்தான் வாழ்க்கை ஒளிமயமாகின்றது. எனது மனைவி எனக்கு என்ன செய்கிறார் என எதிர்பார்க்காமல், நான் எனது மனைவிக்காக வாழ்கிறேன் என்றும், அதேபோல் மனைவியும் கணவர்க்காகவும் வாழும்போது அங்கே அன்புமட்டுமே ஆட்சி செய்யும். சண்டை சச்சரவுகள் இருக்காது. குடும்ப நீதிமன்றங்களின் தேவையே இருக்காது. ஒருவருக்காக ஒருவர் உருகித் தவித்து அன்புசெலுத்தும் வீட்டில்தான் தெய்வம் தரிசனம் தருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் நடந்த மராத்தான் ஓட்டப் போட்டி ஒன்றில், 61 வயது பெண் லதா பகல்வான்காரே, வெறும் காலில் ஓடி, 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்றார் என்ற செய்தி நம் அனைவருக்கும் தெரியும். இது பற்றிக் கூறிய லதா, என் கணவருக்கு, இருதய கோளாறு. மகாராஷ்டிர மாநிலம், பிம்ப்லி என்ற இடத்தில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனையில்தான், ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு, 5,000 ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது. விவசாயக் கூலி வேலை மூலம், தினம் 100 ரூபாய் சம்பாதிக்கும் என்னிடம், என் கணவரின் சிகிச்சைக்குப் பணம் இல்லை. அப்போதுதான், மராத்தான் போட்டி பற்றி அறிந்தேன். நான் வேகமாகக்கூட நடந்ததில்லை. கணவருக்காகப் பந்தயத்தில் ஓடி, பரிசை வெல்லத் தீர்மானித்தேன். காலில் செருப்பு கிடையாது; 9 முழச்சேலையை வரிந்து கட்டி, பந்தயத்தில் ஓடி, வெற்றி பெற்றேன். கணவரைக் காப்பாற்ற, இதற்குமேல், எந்தத் தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று.
அமைதியான குடும்ப வாழ்க்கை உலகத்தின் உயர்ந்த மனிதர்களுக்குக்கூட கிடைக்கவில்லை. கறுப்புக்காந்தி நெல்சன் மண்டேலாவின் திருமண வாழ்வு பற்றித் தெரியும். நாம் சிந்திப்பதற்கு சாளரங்களைத் திறந்துவைத்த சாக்ரடீசின் குடும்ப வாழ்க்கை சோகமானதுதான். படித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும், தோழர்களோடு விவாதித்துக்கொண்டும், இளைஞர்களுடன் பேசிக்கொண்டும் இருந்த சாக்ரடீசை அவரின் மனைவி தூக்கிவைத்துக் கொண்டாடவில்லை. மாறாக அவர் உரத்த குரலில் வசைபாடும்போதெல்லாம், இடி இடிக்கிறது என்பாராம் சாக்ரடீஸ். சாக்ரடீசின் தலையில் கோபத்துடன் தண்ணீரை வாரி இறைக்கும்போது, இடி இடித்த பின்னர் மழைபெய்கிறது என்பாராம். உலகப்புகழ்பெற்ற கிரேக்க மெய்யியல் ஞானிக்கு வீட்டில் கிடைத்த மரியாதை இவ்வளவுதான்.
கோவில் என்றால் அங்கு அன்பும், மன்னிப்பும், அமைதியும் குடிகொள்ளும். குடும்பம் ஒரு கோவில். குடும்பம் எனும் கோவிலிலும் அன்பும், மன்னிப்பும், சமாதானமும் நிரம்பட்டும். அது ஒருவர் ஒருவருக்காக வாழும் அன்பு இல்லமாகட்டும். உலகம் உய்வுபெற நாடு நலம்பெற வேண்டும். நாடு நலமாய் அமைய, குடும்பம் நலமாய் இருக்க வேண்டும். குடும்பம் நலமாய் இருக்க தனிமனித வாழ்க்கை சிறந்த நன்னெறிப் பண்புகளுடன் திகழ வேண்டும். நாம் எல்லாரும் சேர்ந்து நம் குடும்பங்களை கோவில்களாக்குவோம்.








All the contents on this site are copyrighted ©.