2014-05-12 16:12:07

முன்னேற்றங்கள் அனைத்தும் பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பது குறித்து திருஅவை கவலை


மே,12,2014. இன்றைய உலகம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காணும் திருஅவை கவலை கொள்கிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனிவாவில் செயலாற்றும் ஐ.நா. அவை அலுவலகங்களில், திருப்பீடத்தின் சார்பில், நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், World Intellectual Property Organisation (WIPO), அதாவது, அறிவு சார்ந்த உரிமைகுறித்த உலக நிறுவனத்தின் 53வது கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.
வளர்ச்சியடைந்துள்ள நாடுகளிலும், வளர்ச்சியடைந்துவரும் நாடுகளிலும், பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது மனிதர்களின் முழுமையான முன்னேற்றத்தை உறுதிசெய்யவில்லை என்பதை பேராயர் தொமாசி அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.
பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில்கொண்டு செயலாற்றும் அரசுகளில் செல்வருக்கும் வறியோருக்கும் இடையே உள்ள வேறுபாடு, நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதையும் பேராயர் தொமாசி அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
உலக முன்னேற்றத்திற்காக, புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகும்போது, 'அறிவுசார்ந்த உரிமை' என்ற அடிப்படையில், இக்கண்டுபிடிப்புகள், செல்வம் மிகுந்தவரால் அபகரிக்கப்படுவதும் உலக முன்னேற்றத்தை தடை செய்கிறது என்று தொமாசி அவர்கள் கவலை தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.