2014-05-12 16:10:38

பள்ளியின் கதவுகள் திறக்கும்போது, புதிய வாய்ப்புக்களும் நம்முன் திறக்கப்படுகின்றன - கர்தினால் Angelo Bagnasco


மே,12,2014. இன்றையக் காலக் கட்டத்தில், பள்ளிகள் சந்திக்கும் பிரச்சனைகள், உண்மையிலேயே பெரியன எனினும், ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளியின் கதவுகள் திறக்கும்போது, புதிய வாய்ப்புக்களும் நம்முன் திறக்கப்படுகின்றன என்று இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Angelo Bagnasco அவர்கள் கூறினார்.
மே 10, கடந்த சனிக்கிழமை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலும், சுற்றியிருந்த பகுதிகளிலும் நிறைந்திருந்த பள்ளி மாணவ, மாணவியரைச் சந்திக்க வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றுப் பேசிய கர்தினால் Bagnasco அவர்கள், திருத்தந்தை வெளிப்படுத்தும் கற்பிக்கும் திறனைப் பாராட்டிப் பேசினார்.
நம்பிக்கையின் பிறப்பிடமான பள்ளிகளில், உண்மை, அழகு, நன்மை ஆகிய அனைத்தையும் பாடங்களாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னர் கூறியுள்ளதை, கர்தினால் Bagnasco அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
நற்செய்தியின் விழுமியங்களை, பள்ளிகள் வாயிலாகக் கற்றுக்கொள்ளும் வழிகளை, திருத்தந்தை தங்களுக்குச் சொல்லித்தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன், கர்தினால் Bagnasco அவர்கள் தன் வரவேற்புரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.