2014-05-10 16:11:54

புனிதர்பட்ட நிலைகளுக்கானப் படிகளுக்கென ஐந்து இறையடியார்களின் பெயர்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பு.


மே 10,2014. முன்னாள் திருத்தந்தை இறையடியார் ஆறாம் பவுல் மற்றும் இத்தாலியின் அருட்பணியாளர் இறையடியார் லூயிஜி கபுர்லோத்தோ ஆகிய இருவரிடமும் வேண்டியதால் இடம்பெற்ற புதுமைகள் குறித்த விவரங்களை ஏற்று அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளியன்று மாலை புனிதர்பட்ட நிலைகளுக்கான திருப்பேராய தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோவை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 15 ஆண்டுகள் திருஅவையை வழி நடத்தி 1978ம் ஆண்டு உயிரிழந்த இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுலிடம் வேண்டியதால் இடம்பெற்ற புதுமை குறித்த விவரங்களையும், புனித வளனின் புதல்வியர் என்ற துறவு சபையை உருவாக்கிய இத்தாலியின் இறையடியார் அருட்திரு லூயிஜி கர்புலோத்தோவிடம் வேண்டியதால் இடம்பெற்ற புதுமை குறித்த விவரங்களையும் ஏற்றுக்கொண்டு புனிதர் பட்ட நிலைகளுக்கான அடுத்தப் படிகளுக்கான தன் அங்கீகாரத்தை வழங்கினார்.
மேலும், தங்கள் வீரத்துவப்பண்புகளுக்காக இத்தாலியின் அருட்பணியாளர் இறையடியார் Giacomo Abbondo, இஸ்பெயினின் Giacinto Alegre Pujals, பிரான்சின் Carla Barbara Colchen Carré de Malberg ஆகியோரின் பெயர்களும் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும், இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் 'நற்செய்தியால் ஒளிர்விக்கப்பட்ட குடும்பம் கிறிஸ்தவ வாழ்விற்கான ஒரு பள்ளியாகத் திகழ்கிறது. அங்கு ஒருவர், நம்பகத்தன்மையையும் பொறுமையையும் தியாகத்தையும் கற்றுக்கொள்கிறார்' என எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.