2014-05-10 16:23:50

பாகிஸ்தானில் தேவ நிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்காக வாதாடிய வழக்குரைஞர் சுட்டுக் கொலை


மே 10,2014. பாகிஸ்தானில் தேவ நிந்தனைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் சார்பாக, நீதிமன்றத்தில் வாதாடி வந்த முன்னணி வழக்கறிஞர் ரஷீத் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அந்நாட்டின் கிறிஸ்தவ, இஸ்லாம் மத நடவடிக்கையாளர்களும், அரசியல் தலைவர்களும், மனித உரிமைக் குழுக்களும் கண்டித்துள்ளனர்.
முகமது நபியை இழிவுபடுத்திவிட்டதாக இஸ்லாமிய தீவிர அடிப்படைவாதிகளால் சென்ற ஆண்டு மார்ச் மாதம் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிவந்த ரஷீத் ரஹ்மான் என்ற வழக்குரைஞர், கொலை மிரட்டல்கள் வந்தும் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தீவிரவாத சக்திகளை எதிர்த்து அச்சமின்றி குரல்கொடுத்த தைரியம் மிக்க மனித உரிமை வழக்குரைஞர் ரஹ்மான் என்று சக வழக்குரைஞர்களால் பாராட்டப்படும் இவர், புதன்கிழமை இரவு முல்தான் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளால் சுடப்பட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.