2014-05-09 16:34:09

மே 10, 2014. புனிதரும் மனிதரே. - ஏழைகளின் பணியாளராக விரும்பிய பிரபு (புனித யூஜின் டி மசனோ)


ஃபிரான்ஸ் நாட்டின் பிரபுக் குடும்பத்தில் பிறந்த யூஜின், தன் 8ம் வயதில், அந்நாட்டில் ஏற்பட்ட புரட்சியினால், குடும்பத்தோடு இத்தாலிக்குக் குடிபெயர்ந்தார். இத்தாலியிலும் ஆடம்பரமான வாழ்வையே மேற்கொண்டார். 11 ஆண்டுகளுக்குப்பின் தாய்நாடு திரும்பிய இந்த 20 வயது இளைஞர், ஒரு பெரும் பணக்காரப் பெண்ணை மணக்க விரும்பினார். ஆனால் திருமணத்திற்கு முன்னரே அப்பெண் மரணமடைந்தார். 1807ம் ஆண்டு இவரின் 25ம் வயதில் புனித வெள்ளியன்று இயேசுவை தன் வாழ்வில் சந்தித்தார். இவர் வாழ்வே தலைகீழாய் புரண்டதைப்போல் ஆனது. செல்வச்செழிப்பால் ஆடம்பரமாக வாழ்ந்த இவர், ஏழைகளின் பணியாளராகவும் குருவாகவும் மாற விரும்பி, குருமாணவ இல்லத்தில் இணைந்து 1811ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பெரிய பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த இவரை, எப்பணியில் அமர்த்துவது என ஆயருக்கேத் தெரியாத நிலை. ஆனால் அருட்பணி யூஜினோ, எழைகளிடையேப் பணியாற்றச் செல்கிறேன் என்றார். இளையோர், சிறைக்கைதிகள், ஏழைகள் என இவர் பணி விரிந்தது. இதற்கென ஒரு துறவு சபையையும் துவக்கினார். 1826ம் ஆண்டு திருத்தந்தையின் அங்கீகாரமும் அதற்கு கிடைத்தது. 1837ல் Marseilleயின் ஆயராக நியமிக்கப்பட்டார் அருட்திரு யூஜின். 1861ம் ஆண்டு உயிரிழந்த இப்புனித அருட்திரு யூஜின், 1995ம் ஆண்டு திருஅவையில் புனிதராக அறிவிக்கப்பட்டார். அன்னை மரியின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட இந்த புனிதர் யூஜின் டி மசனோ துவக்கிய அமல மரி தியாகிகள் சபை, இலங்கை, இந்தியா உட்பட ஐந்து கண்டங்களின் பல நாடுகளிலும் ஏறத்தாழ 5000 அங்கத்தினர்களைக் கொண்டு பணியாற்றிவருகிறது. 1782ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி பிறந்த புனித யூஜின் டி மசனோவின் திருவிழா மே 21ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.