2014-05-09 16:39:45

திருத்தந்தை பிரான்சிஸ் - நற்செய்தி அறிவிப்பு என்பது இன்றைய உலகில் நாம் சந்திக்கும் ஒரு தீவிரச் சவால்


மே,09,2014. மறைப்பரப்புப் பணியானது, கத்தோலிக்கத் திருஅவையின் அனைத்துப் பணிகளுக்கும் முன்னோடியாக, எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலகெங்கும் திருத்தந்தையின் மறைப்பரப்புப் பணி கழகம் என்ற அமைப்பில் பணியாற்றும் பன்னாட்டைச் சேர்ந்த 200 உறுப்பினர்களை இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்பு என்பது இன்றைய உலகில் நாம் சந்திக்கும் ஒரு தீவிரச் சவால் என்று கூறினார்.
நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வரும் இவ்வுலகில், நற்செய்தி அறிவிப்புப் பணியிலும் மாற்றங்கள், புத்துணர்வைக் கொணரும் வழிகள் ஆகியத் தேவைகள் எழுகின்றன என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிப்பது என்ற கடமை, திருஅவையின் அடிப்படை அழைப்பு என்றும், பிறரன்பு, நீதி, ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் உருவாகும் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துரைப்பது இன்றைய அவசியம் என்றும் திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
நமது திருஅவை, பேறு பெற்றோரின் திருஅவை என்ற நற்செய்தியை நாம் பறைசாற்றும்போது, வறியோர், ஒதுக்கப்பட்டோர், வன்முறைகளுக்கு உள்ளாவோர், நீதிக்காக போராடுவோர் என்ற பேறுகளைப் பெற்றவர்களை திருஅவை கொண்டுள்ளது என்ற நற்செய்தியை நாம் பறைசாற்றவேண்டும் என்று கூறினார் திருத்தந்தை.
திருத்தந்தையின் மறைபரப்புப் பணி கழகத்தில் பணியாற்றும் அனைத்து அருள் பணியாளர்கள், துறவியர், பொது நிலையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் தான் ஆசீர்வதிப்பதாகக் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.