2014-05-09 16:36:34

திருத்தந்தை பிரான்சிஸ் - நன்னெறியின் அடிப்படையில் உலக மக்களை ஒன்றிணைப்பது ஐ.நா. அவையின் முக்கியப் பணி


மே,09,2014. ஐக்கிய நாடுகள் அவை, மில்லென்னிய இலக்குகளாக அறிவித்துள்ள திட்டங்கள் போற்றுதற்குரியவை எனினும், உலக மக்கள் இன்னும் உயர்ந்த முயற்சிகளைப் பெற வேண்டியவர்கள் என்பதை மறக்கக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஐக்கிய நாடுகள் அவையின் உயர் மட்ட அதிகாரிகளின் இடைக்கால ஆண்டுக் கூட்டம் உரோம் நகரில் நடைபெறும் இவ்வேளையில், இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ள அனைவரும், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களுடன், இவ்வெள்ளி காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தனர்.
உயர் மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய உரையில், ஐ.நா.அவை ஆற்றிவரும் பணிகளைக் குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்தத் திருத்தந்தை, உலக மக்களின், குறிப்பாக, வலுவற்ற வறியோரின் மனித மாண்பை உறுதி செய்யும் முயற்சிகளை ஐ.நா.அவை இன்னும் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வறுமையை இவ்வுலகில் நிலைநாட்டும் அனைத்து கட்டுமானங்களையும், இயற்கையைச் சீரழிக்கும் தன்னல முயற்சிகளையும் முறியடிக்க இன்னும் ஆழமான, தன்னலமற்ற வீரமும், தாராள மனமும் தேவைப்படுகிறது என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
லூக்கா நற்செய்தியில், சக்கேயு இயேசுவைச் சந்தித்த நிகழ்வைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை, இயேசுவின் பார்வையால் மனம் மாறிய சக்கேயு, பகிர்வின் வழியாக நீதியை மீண்டும் நிலை நிறுத்த எடுத்த முடிவு, இன்றைய உலகத் தலைவர்களிடமும், உலக அமைப்புக்களை வழிநடத்தும் பொறுப்பாளர்களிடமும் தேவைப்படுகிறது என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
மனம் மாறிய சக்கேயுவிடம், பணத்தை மையமாக்கி அவர் ஆற்றிவந்த பணியை மாற்றச் சொல்லி இயேசு கேட்கவில்லை, மாறாக, அந்தப் பணியில் கிடைக்கும் பயன்களை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளவே இயேசு அவரைத் தூண்டினார் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
தனக்கு முன் திருஅவையின் தலைமைப் பொறுப்பில் இருந்த இரு திருத்தந்தையரைப் புனிதர்களாக உயர்த்திய நிகழ்வைக் குறித்து தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இவ்விரு திருத்தந்தையரும் மனித முன்னேற்றம், குறிப்பாக, வறியோரின் பிரச்சனைகள் குறித்து தயங்காமல் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர் என்றும் எடுத்துரைத்தார்.
வேறு வழியேதும் காணாமல் விரக்தியடையும் மக்கள், 'மக்களைப் புறக்கணிக்கும் பொருளாதாரம்', 'தூக்கி எறியும் கலாச்சாரம்' மற்றும், 'மரணத்தின் கலாச்சாரம்' என்று இவ்வுலகம் காட்டும் வழிகளை, மெளனமாக ஏற்றுக் கொள்வதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் விண்ணப்பித்தார்.
ஐ.நா.அவை ஆற்றிவரும் அனைத்து பணிகளையும் தான் ஆசீர்வதிப்பதாகக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதம், மொழி, கலாச்சாரம் என்ற அனைத்து எல்லைகளையும் தாண்டி, நன்னெறியின் அடிப்படையில் உலக மக்களை ஒன்றிணைப்பது ஐ.நா. அவையின் முக்கியப் பணியாக அமையவேண்டும் என்ற வார்த்தைகளுடன் தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.