2014-05-08 16:10:04

யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் - இலங்கையில் ஒப்புரவைக் கொணர்வது, ஆயர்களின் முதன்மையான பணி


மே,08,2014. இலங்கையில் வாழும் ஆயர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரின் முதன்மையான பணி, இந்நாட்டில் ஒப்புரவைக் கொணர்வது ஒன்றே என்று யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் கூறினார்.
கடந்த வெள்ளி, சனி ஆகிய இருநாட்களில் இலங்கை ஆயர்கள் வத்திக்கானில் திருத்தந்தையுடன் மேற்கொண்ட 'அத் லிமினா' சந்திப்பைத் தொடர்ந்து, ஆயர் சவுந்தரநாயகம் அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிந்து 5 ஆண்டுகள் முடிந்துள்ள சூழலில், தகுதியான, நிலையான ஓர் அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதே, இலங்கைத் தலத்திருஅவையின் அடிப்படை வேட்கை என்று ஆயர் சவுந்தரநாயகம் அவர்கள் எடுத்துரைத்தார்.
நன்னெறி, கிறிஸ்தவம் என்ற இரு அடிப்படை விழுமியங்களின் அதிகாரத்தைக் கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலங்கை அரசுக்கு தனிப்பட்ட வகையில் அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று ஆயர் சவுந்தரநாயகம் அவர்கள் விருப்பம் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் விளங்கிய எளிமையும், பணியில் அவர் காட்டும் அர்ப்பணிப்பும் இலங்கை ஆயர்களை வெகுவாகக் கவர்ந்தன என்று கூறிய ஆயர் சவுந்தரநாயகம் அவர்கள், திருத்தந்தை விரைவில் இலங்கை வரவேண்டும் என்ற ஆவலையும் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.