2014-05-08 13:43:05

மே,09,2014 : புனிதரும் மனிதரே : கிறிஸ்தவர்களின் பிறரன்பால் ஈர்க்கப்ப்டவர்(St.Pachomius, the great)


குழப்பங்களும் உள்நாட்டுப் போரும் இடம்பெற்ற அக்காலத்தில் உரோமையப் படையில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். அப்படி எகிப்து நாட்டிலிருந்து 21 வயது Pachomius என்ற இளைஞனும் அவனது விருப்பத்துக்கு மாறாகப் படையில் சேர்க்கப்பட்டான். மற்ற பல இளைஞரோடு பகோமியுசும் கப்பலில் ஏற்றப்பட்டு நைல்நதியில் விடப்பட்டார். அவர்களது கப்பல் அன்று மாலை Thebes சென்றடைந்தது. இப்படி கைதிகள்போல் அங்கு வரும் படைவீரர்களுக்கு சில உள்ளூர் கிறிஸ்தவர்கள் உணவு கொண்டுவந்து கொடுத்து தேவையான பிற உதவிகளையும் செய்தனர். இது பகோமியுசை மிகவும் பாதித்தது. முன்பின் தெரியாத இந்த இளைஞருக்கு இவர்கள் பரிவோடு உணவு கொடுப்பதைப் பார்த்து அவர்களிடம், இதைச் செய்ய உங்களைத் தூண்டுவது எது எனக் கேட்டார். அதற்கு அவர்கள், விண்ணிலுள்ள கடவுள் எனப் பதில் கூறினர். இதற்குப் பின்னர், இந்தச் சிறை வாழ்விலிருந்து தன்னை விடுதலை செய்யுமாறு கிறிஸ்தவர்களின் கடவுளிடம் செபித்தார் பகோமியுஸ். கி.பி. 313ம் ஆண்டில் விடுதலையும் கிடைத்தது. உடனே இராணுவத்தைவிட்டு விலகி, கிறிஸ்தவம் பற்றி மேலும் அறிந்து திருமுழுக்கும் பெற்றார். பின்னர் புகழ்பெற்ற துறவிகளைத் தொடர்புகொண்டு கிறிஸ்தவம் பற்றி அறிந்தார். ஏழு ஆண்டுகள் Palaemon என்ற துறவியின் வழிநடத்துதலில் வாழ்ந்த பின்னர், காட்டில் புனித வனத்து அந்தோணியார் வாழ்ந்த இடத்துக்கு அருகில் தனியாக வாழ்ந்தார். ஒருநாள் இவருக்கு கிடைத்த இறைஏவுதலின்படி காட்டில் வாழ்ந்துவந்த துறவிகளுக்கு ஆதீனங்களை அமைத்தார். காட்டில் புனித வனத்து அந்தோணியார் உட்பட பல துறவிகள் தனித்தனியாக கடும் தவ வாழ்வை மேற்கொண்டிருந்தாலும், துறவிகள் குழுவாக வாழ்வதற்கு முதன்முதலில் ஆதீனங்களை அமைத்தவர் புனித பகோமியுஸ். இவர் ஆதீனக்குழு வாழ்வின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவரை இந்த ஆதீனக்குழு "Abba" அதாவது தந்தை என அழைத்தது. இந்தச் சொல்லிலிருந்தே "Abbot" அதாவது ஆதீனத்தலைவர் என்ற சொல் உருவானது. புனித பகோமியுஸ் கி.பி. 287ம் ஆண்டு எகிப்தின் Thebes ல் பிறந்தார். கி.பி.346ம் ஆண்டு மே 9ம் தேதி காலமானார். இவரது விழா மே 9ம் தேதியும், சில இடங்களில் மே 15ம் தேதியும் சிறப்பிக்கப்படுகின்றன. ஆதீனக்குழு வாழ்வுக்கு இவரே முதலில் ஒழுங்குகளை எழுதியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.