2014-05-08 16:09:38

கத்தோலிக்கத் திருஅவையும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையும் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை ஒரே நாளில் கொண்டாடினால் நலம் - முதுபெரும் தந்தை, 2ம் Tawadros


மே,08,2014. கத்தோலிக்கத் திருஅவையும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு முறை சபையும் ஒருங்கிணைந்து, கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை ஒரே நாளில் கொண்டாடினால் நலம் என்ற கருத்து அடங்கிய ஒரு செய்தியை, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை, 2ம் Tawadros அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, 2ம் Tawadros அவர்கள், கடந்த ஆண்டு மே மாதம் 10ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வின் முதல் ஆண்டு நிறைவையொட்டி, முதுபெரும் தந்தை 2ம் Tawadros அவர்கள், தன் விருப்பத்தை வெளியிட்டுள்ள இச்செய்தி, எகிப்தில் பணியாற்றும் திருப்பீடத் தூதர் பேராயர் Paul Gobel வழியாக திருத்தந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆப்ரிக்கா, மத்தியக் கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் கத்தோலிக்கர்களும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்தவர்களும் கூடி வாழ்ந்துவரும் சூழலில், அவர்கள், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை இணைந்து கொண்டாடுவது பொருத்தமாகத் தெரிகிறது என்று முதுபெரும் தந்தை 2ம் Tawadros அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பீடத் தூதர் பேராயர் Gobel அவர்கள், முதுபெரும் தந்தையின் இச்செய்திக்கு பதிலளித்தபோது, அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதி ஒருவர் கலந்துகொள்ள வேண்டும் என்ற அழைப்பை, திருத்தந்தையின் சார்பில் விடுத்துள்ளார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.