2014-05-07 08:22:04

மே 08,2014 புனிதரும் மனிதரே: விலங்குகள் காத்த உடல்(St. Victor the Moor அ St. Victor Maurus)


நான் ஒரு படை வீரர். மாக்சிமியானுஸ் பேரரசராக ஆட்சிசெய்தபோது சீசர் இராணுவத்தில் பணிசெய்தேன். நான் வட ஆப்ரிக்காவின் Mauretaniaவில் அதாவது தற்போதைய மொரோக்கோ நாட்டில் பிறந்தவன். நான் மிலானில் மாக்ஸ்மியனுக்குக்கீழ் படை வீரனாகப் பணி செய்தேன். உரோமைக் கடவுள்கள் பற்றி நான் மோசமாகப் பேசுவதாக ஒற்றர்கள் என்னைப் பற்றி பேரரசரிடம் போட்டுக் கொடுத்தார்கள். மாக்ஸ்மியனுஸ் மிலானில் கிறிஸ்தவருக்கு எதிரான அடக்குமுறையைத் தொடங்கினார். ஏறத்தாழ 303ம் ஆண்டில் கிறிஸ்தவ விசுவாசத்துக்காக என்னை விசாரித்தனர். மாக்சிமியானுஸ் என்னைக் கேள்விகள் கேட்டபோது எனது பதில்களை அவர் விரும்பவில்லை. Circus என்ற இடத்துக்கு அருகில் சிறையில் வைக்கப்பட்டேன். நான் உரோமைக் கடவுள்களுக்குப் பலிகொடுக்க வேண்டுமென்று கடுமையாகச் சித்ரவதை செய்து இதற்கு ஆறுநாள்கள் அவகாசம் கொடுத்தார்கள். ரொட்டியும் தண்ணீரும் கொடுக்கப்படவில்லை. Circus குதிரைப்பந்தயத் திடலில் ஒரு மேடை அமைக்கப்பட்டு அதில் நான் கிடத்தப்பட்டேன். முரட்டுத்தனமாக அடிக்கப்பட்டேன். ஆனால் நான், கிறிஸ்துவே எனது மீட்பு, அவரே எனது சக்தி என்று சொன்னேன். உரோமைக் கடவுள்களுக்குப் பலிகொடுத்தால் எனக்கு தங்கமும் வெள்ளியும் சொத்துக்களும் இராணுவத்தில் உயர் பதவிகளும் தருவதாக உறுதியளித்தார் மாக்சிமியானுஸ். நான் மறுக்கவே மீண்டும் சிறைசெய்யப்பட்டேன். மாக்சிமியானுஸ் என்மீது உருக்கிய ஈயத்தை ஊற்றினார். நான் செபித்தேன். வானதூதர் தோன்றினார். காய்ச்சிய ஈயம் குளிர்ந்த நீராக மாறியது. நான் இயேசுவுக்கு நன்றி சொன்னேன். பின்னர் எனது தலையை வெட்டினார்கள். எனது உடல் மிருகங்களுக்கு உணவாகட்டும் எனச் சொல்லி எனக்குப் புதைகுழி வழங்கப்படவில்லை. ஆனால் இரு விலங்குகள் ஒன்று தலைமாட்டிலும், மற்றொன்று கால்மாட்டிலுமாக என்னைக் காவல் காத்தன. இறுதியில் எனது உடலை அடக்கம் செய்ய Maximianus அனுமதியளித்தார். நான் மறைசாட்சியான நாள் மே 8ம் தேதி. இவ்வாறு தனது வரலாற்றைச் சொல்லியிருக்கும் மறைசாட்சி புனித விக்டர் மவ்ருஸ்(St. Victor Maurus).

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.