2014-05-06 16:08:43

விவிலியத் தேடல் – பரிசேயரும் வரிதண்டுபவரும் உவமை – பகுதி - 7


RealAudioMP3 லூக்கா நற்செய்தி, 18ம் பிரிவில் கூறப்பட்டுள்ள ‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ உவமையின் ஆரம்ப வரிகளில், "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர்" என்று இயேசு ஆரம்பிக்கிறார். இறைவன், கோவில், வேண்டுதல் என்ற வார்த்தைகளைக் கேட்டதும், இவ்வுவமை, செபிப்பது பற்றிய ஒரு பாடம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், தாழ்ச்சி என்ற உயர்ந்த பாடத்தைச் சொல்லித் தரவே இயேசு இந்த உவமைச் சொன்னார் என்பதை இவ்வுவமையின் அறிமுக வரிகள் இவ்வாறு சொல்கின்றன: தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: (லூக்கா 18: 9)

"இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்" (லூக்கா 18: 10) என்ற வார்த்தைகளுடன் இயேசு இந்த உவமையைத் துவக்கியதும், சூழ இருந்தவர்கள் கதையின் முடிவை ஏற்கனவே எழுதி முடித்திருப்பர். பரிசேயர் இறைவனின் ஆசீர் பெற்றிருப்பார்; வரிதண்டுபவர் இறைவனின் கோபமான தீர்ப்பைப் பெற்றிருப்பார் என்று மக்கள் முடிவு கட்டியிருப்பர். அவர்கள் அவ்விதம் சிந்தித்ததற்கு காரணமும் இருந்தது. பரிசேயர்கள் யூத சமுதாயத்தில் எடுத்துக்காட்டான வாழ்க்கை நடத்தியவர்கள். அதுவும், இந்த முயற்சிகள் எல்லாமே மக்களின் கண்கள் முன்பாகவே இவர்கள் மேற்கொண்டனர்.
பரிசேயருடன் ஒப்பிட்டால், வரிதண்டுபவர், மக்கள் மதிப்பில் பல படிகள் தாழ்ந்தவர்தான். உரோமையர்களுக்கு வரி வசூல் செய்த இவரிடம், நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று, இறைப்பற்று என்று பல அம்சங்கள் தொலைந்து போயிருந்தன. எனவே, இவ்விருவரும் இறைவன் முன்னிலையில் இருந்தபோது, பரிசேயருக்கு ஆசீரும், வரிதண்டுபவருக்கு தண்டனையும் இறைவன் வழங்குவார் என்று மக்கள் எண்ணியதில் தவறில்லை!

இத்தகைய மனநிலையோடு கதையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் சற்றும் எதிர்பாராத வகையில் அவர்கள் எண்ணங்களை முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப் போட்டார் இயேசு: “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” (லூக்கா 18: 14) என்று இயேசு இவ்வுவமையை முடித்தது, சூழ இருந்தவர்களில் பலருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும். ஆனால், அதே நேரம், வேறு பலருக்கு மகிழ்வையும், மன நிறைவையும் தந்திருக்கும்.

இந்தத் தலைகீழ் மாற்றம் உருவாகக் காரணம் என்ன? இவ்விருவரும் பெற்றிருந்த தன்னறிவு; அவர்கள் இறைவனிடம் கொண்ட உறவு. இவ்விருவருமே தங்களைப்பற்றி இறைவனிடம் பேசுகின்றனர். பரிசேயர் தனது நேர்மையான, அப்பழுக்கற்ற வாழ்வை இறைவனிடம் பட்டியலிட்டுக் கூறுகிறார். பரிசேயரின் கூற்று இறைவனின் கவனத்தை வலுக்கட்டாயமாகத் தன்மீது திருப்ப மேற்கொண்ட முயற்சி. அந்தக் கோவிலுக்கு தன்னுடன் சேர்ந்து வந்துவிட்ட வரிதண்டுபவரின் மீது இறைவனின் கவனம் திரும்பிவிடுமோ என்ற பயத்தில், அவரைவிட தான் கடவுளின் கவனத்தைப் பெறுவதற்குத் தகுதி உடையவர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பரிசேயர். சொல்லப்போனால், கடவுளின் பார்வை தன்மேல் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஆவலில், இவர் கடவுளுக்கே கடிவாளம் மாட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதற்கு மாறாக, வரிதண்டுபவர் தன்னைப்பற்றி அதிகம் பேசவில்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: "இறைவா, இதோ நான், இதுதான் நான், இவ்வளவுதான் நான்." தன் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளுதல், அதனை ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய அம்சங்கள் உண்மையான தாழ்ச்சியின் கூறுகள். இந்தத் தன்னறிவில், அடுத்தவரை இணைக்காமல், ஒப்பிடாமல் சிந்திப்பது இன்னும் உயர்ந்ததொரு மனநிலை.

தலை சிறந்த ஏழு புண்ணியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது தாழ்ச்சி. இந்தப் புண்ணியத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய தாழ்ச்சியைக் குறித்து மக்களுக்கு மறையுரையாற்றிய ஒருவர், இறுதியில் ஒரு சிறு செபத்தைச் சொன்னார்: "இறைவா, இயேசுவைப்போல் பணிவில் நாங்கள் வளரச் செய்தருளும். எங்களுக்கு முன் நிற்பவர்கள் எங்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், அவர்களுக்கு முன் பணிவுடன் இருக்க வரம் தாரும்" என்று அவர் வேண்டினார்.
இது மிகவும் ஆபத்தான, அபத்தமான, தவறான செபம். போலித்தாழ்ச்சிக்கு அழகானதோர் எடுத்துக்காட்டு. நமக்கு முன் நிற்பவர் நம்மைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணமே நம்மைத் தற்பெருமையில் சிக்கவைத்துவிடும். அந்தப் பெருமிதமான எண்ணங்களுடன் அவர்களுக்கு முன் பணிவது, நடிப்பே தவிர, உண்மையான பணிவு அல்ல. இயேசுவைப்போல் எம்மை மாற்றும் என்று சொன்ன அதே மூச்சில், போலியானத் தாழ்ச்சியையும் இணைப்பது மிகவும் ஆபத்தானது.

பெருமை, பணிவு என்ற இரு மனித உணர்வுகளை, மனநிலைகளை ஆய்வுசெய்ய ‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ உவமை நம்மை அழைக்கின்றது. மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, பெருமையும், பணிவும் எதிரும் புதிருமான முரண்பட்ட இரு மனநிலைகளாகத் தோன்றுகின்றன. ஒன்று இருக்கும் இடத்தில், மற்றொன்று இருக்கமுடியாது என்பதே நம்மிடையே உள்ள பரவலான கருத்து. ஆயினும், ஆழமாகச் சிந்தித்தால், உண்மையான பெருமையும், உண்மையான பணிவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒளி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இருளைப்பற்றி நாம் சிந்திப்பதுபோல், உண்மையான பணிவு அல்லது பெருமை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள போலியானப் பணிவு, போலியான பெருமை ஆகியவற்றை உருவாக்கும் அகந்தையைப் புரிந்துகொள்வது நல்லது.

‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ உவமையில் நாம் காணும் பரிசேயர் தன்னை மற்றவர்களோடு ஒப்புமைப்படுத்தி, அதில் தன் பெருமையை நிலைநாட்டுகிறார். இவ்வகைப் போட்டியாலும், ஒப்புமையாலும், அகந்தையில் சிக்கியவர்கள், கடவுளோடும் தொடர்பு கொள்ளமுடியாது. அவர்களைப் பொருத்தவரை, கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.

இதற்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர். “தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்” என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று ஆரம்பமாகும் அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து குறள்களை நமது சிந்தையில் பதிக்கிறார் திருவள்ளுவர்.
சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள் பணியாளர் சாமு இதயன் அவர்கள் ‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ உவமையை அழகானதொரு பாடலாக உருவாக்கியுள்ளார். இப்பாடல், அவர் வெளியிட்டுள்ள 'இதயமே' என்ற ஒலித்தகட்டில் உள்ளது. அந்தப் பாடலின் வரிகளோடு, 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' என்ற உவமையில், கடந்த ஏழு வாரங்களாக நாம் மேற்கொண்ட தேடலை நிறைவு செய்வோம்:

அழகான கோயில் அங்கொன்று உண்டு
அனைவரும் சென்று ஜெபம் செய்வதுண்டு
நாள் ஒன்று வந்தது - அங்கு கதை ஒன்று நடந்தது

பரிசேயன் என்று ஒருவன் இருந்தான்
ஆயக்காரன் என்றும் ஒருவன் இருந்தான்
இருவரும் செபிக்க கோயில் சென்றார்
இதயங்கள் வேறாய் அங்கே நின்றார்
தந்தையே... தந்தையே!
என்னைப் போல் யாரு உண்டு? - உன்
சட்டங்களே என் வாழ்வு இன்று!
கள்வர் அநீதர் விபச்சாரர் - இந்த
ஆயக்காரன் போல் நானில்லை
நோன்பிருப்பதிலும் குறையுமில்லை - என்
கோயில் வரியில் பாக்கியில்லை
இப்படி ஜெபித்தான் பரிசேயன் (தான்)
இறைவன் முன்னே ஆர்ப்பரித்தான்

அவன் பின்னே சென்ற ஆயக்காரன்
ஆலயம் உள்ளே நுழையவில்லை
தொலைவினில் நின்றே தலை குனிந்தே
நிலை தன்னை உணர்ந்தே அவன் செபித்தான்
தந்தையே... தந்தையே!
நான் ஒரு பாவி.. ரொம்பவும் பாவி
நிமிர்ந்தும்மைப் பார்க்கத் தரமில்லா பாவி
இரக்கமாயிரும் தேவனே - என் மேல்
இரக்கமாயிரும் தேவனே!
இப்படி ஜெபித்தான் ஆயக்காரன்
இறைவன் முன்னே பணிந்தான் இவன்

இருவரில் உண்மையில் செபித்தது யார்?
இறைவனின் பார்வையில் உயர்ந்தவன் யார்?
பரிசேயனா? ஆயக்காரனா?
நிமிர்ந்தவனா? இறைவன் முன்னே பணிந்தவனா?
தாழ்த்துங்கள்! உங்களைத் தாழ்த்துங்கள்!
தாழ்த்துங்கள்! இறைவன் முன்னே தாழ்த்துங்கள்!
உயர்வீர்கள்! உயர்வீர்கள்!
வாழ்வில் உயர்வீர்கள்!
அழகான கோயில் அங்கொன்று உண்டு
அனைவரும் சென்று பணிவதே நன்று!








All the contents on this site are copyrighted ©.