2014-05-03 10:50:03

மே 03, 2014. புனிதரும் மனிதரே. - புனித கித்தேரியம்மாள் (குவித்தேரியா)


தமிழில் புனித கித்தேரியம்மாள் என அழைக்கப்படும் புனித குவித்தேரியா, 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் புனிதரும், கன்னியும், மறைசாட்சியும் ஆவார். இவரின் வாழ்க்கையைப்பற்றி முழுவதும் தெரியவில்லை. இவர் உரோமை மறைசாட்சிகளின் பட்டியலில் இடம் பெறுகின்றார்.
உரோமில் இராணுவ அதிகாரியாக இருந்த ஒருவரின் மகளாக இருந்த புனித கித்தேரியம்மாவும் அவரின் சகோதரிகளும் உரோமானிய கடவுளர்களை வழிபட மறுத்ததால், அவ்விடத்திற்கு அதிகாரியாக இருந்த அவர்களின் தந்தையின் முன் கொண்டுவரப்பட்டனர். அவர்களின் தந்தையோ அவர்களை உரோமை அதிகாரிகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். அவர்கள் அதற்கு இணங்க மறுத்ததால் அவர்களை ஒரு கோபுரத்தில் சிறைவைத்தார். எனினும், அவர்கள் அங்கிருந்து தப்பி, அங்கிருந்த மற்ற கைதிகளையும் விடுவித்தனர். பின்னர் இவர்கள் உரோமைப் பேரரசுக்கு எதிராக கரந்தடிப் போரில் ஈடுபட்டனர். இப்போரின்போது இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். புனித கித்தேரியம்மாள் தலை வெட்டிக் கொல்லப்பட்டார். இவரின் விழாநாள் மே 22 ஆகும். வீரமாமுனிவர் இவரைக் காவியத்தலைவியாகக் கொண்டு எழுதிய கித்தேரியம்மாள் அம்மானை என்னும் நூல் இவரின் வரலாற்றைக் களமாகக் கொண்டுள்ளது.
பிரான்சின் தென்பகுதி மற்றும் இஸ்பெயினின் வடபகுதியைச் சேர்ந்த பல கோவில்கள் இவர் பெயரால் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. மறைசாட்சியான புனித கித்தேரியம்மாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம், தூத்துக்குடியிலுள்ள மனக்கரை எனுமிடத்தில் உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.