2014-05-03 18:19:07

திருத்தந்தை: இலங்கையில் ஒப்புரவுப் பணிகள் இன்னும் நிறையவேத் தேவைப்படுகின்றன


மே 03,2014. மனித குலத்திற்குள் புளிக்காரமாக செயல்பட அழைக்கப்பட்டுள்ள நாம், நாம் பெற்றுள்ளதை பகிர்வதன்மூலமும் நம் வாழ்க்கை வெளிப்பாடுகள் மூலமும் செயல்படவேண்டும் என இலங்கை ஆயர்களிடம் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
5 ஆண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் ‘அட் லிமினா’ சந்திப்பையொட்டி இலங்கையின் கர்தினால் மால்கம் இரஞ்சித் உட்பட 14 ஆயர்களை இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, நாட்டில் உள்நாட்டுப்போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் ஒப்புரவை ஊக்குவிப்பதிலும், மனித உரிமைகள் மதிக்கப்படுவதிலும் இனங்களிடையேயான பதட்டநிலைகளை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் இன்னும் நிறைய ஆற்றவேண்டியுள்ளது என்பதையும் ஆயர்களுக்கு வழங்கிய செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரின் விளைவுகளை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு அருகாமையில் இருந்து ஆறுதல் வழங்க வேண்டிய திருஅவையின் கடமையையும் அதில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாட்டில் ஒப்புரவைக் கொணர்ந்து மீண்டும் கட்டி எழுப்புவதில் தங்கள் பங்கை ஆற்ற விரும்பும் தலத்திருஅவை, முதலில் ஒன்றிப்பை நோக்கிய தன் பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், இலங்கை கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, பேரிடர் காலங்களிலும், கல்வி, நலஆதரவு, ஏழ்மை ஒழிப்பு ஆகிய துறைகளிலும் ஆற்றி வரும் பணிகள் குறித்தும் பாராட்டியுள்ளார். இலங்கையில் மதங்களிடையே இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் தன் திருப்தியை அச்செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.