2014-05-02 16:15:07

திருத்தந்தை : விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைமுறை மற்றவர்களுக்கு வழிகாட்டுபவைகளாக இருக்கவேண்டும்


மே02,2014. விளம்பரங்கள், தொலைக்காட்சி என இன்று கால்பந்து விளையாட்டு ஒரு வியாபாரம்போல் மாறிவிட்டாலும் பொருளாதாரக் கூறுகள் விளையாட்டை ஆட்சிச் செய்ய அனுமதிக்கக் கூடாது என தன்னைச் சந்தித்த இத்தாலிய வீரர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியக் கால்பந்துக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் விளையாட உள்ள ஃபுளாரன்ஸ் மற்றும் நேப்பிள்ஸ் நகர்களின் குழுக்களையும் இத்தாலிய கால்பந்து விளையாட்டுப் பிரதிநிதிகளையும் இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்துபோது திருத்தந்தை பிரான்சிஸ், கால்பந்து விளையாட்டு, சமூகப்பொறுப்புணர்வை எதிர்பார்க்கும் ஒன்று என்றும் எடுத்துரைத்தார்.
பொருளாதாரக் கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது விளையாட்டுத் துறை மாசுபடுத்தப்பட்டுவிடும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், விளையாட்டுத் துறையின் மாண்பு எப்போதும் காக்கப்படவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார்.
கால்பந்து விளையாட்டு வீரர்களின் விசிறிகளுள் பெரும்பான்மையினோர் சிறார்களும் இளையோரும் என்பதால், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைமுறை மற்றவர்களுக்கு வழிகாட்டுபவைகளாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.