2014-05-02 16:14:36

கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் தொடர்வது குறித்து திருத்தந்தை கவலை


மே02,2014. இயேசு நமக்கு கற்றுத் தந்த பாடத்துடனும், அவர் வழங்கிய அன்புடனும் நடைபோடவேண்டிய நாம், சில மதத்தலைவர்களின் வெளிவேடங்களையும், அதேவேளை, கிறிஸ்தவத்திற்காக துன்பங்களை அனுபவிக்கவேண்டிய நிலைகளையும் காண்கிறோம் என இவ்வெள்ளிக்கிழமை காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதிகாலத் திருஅவையில் இயேசுவுக்காக பெரும் துன்பங்களை கிறிஸ்தவர்கள் அனுபவித்ததுபோல் இன்றும் சில நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரானக் கொடுமைகள் தொடர்கின்றன என, தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய காலை திருப்பலியில் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில நாடுகளில் விவிலியங்களை வைத்திருந்ததற்காகச் சிறைத்தண்டனை வழங்கப்படுவதையும், சிலுவையை அணிந்ததற்காக அபராதம் விதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்தவர்களை சகிக்க முடியாத தலைவர்கள் ஆதிகாலத்தில் இருந்ததைப்போல், இப்போதும் மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பவர்கள் உள்ளார்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பெயரால் விசுவாசிகள் சிலுவையிலறையப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தியைப் படித்தபோது தான் கண்ணீர்விட்டு அழுததாகவும் கூறினார்.
இயேசுவுக்காகத் தங்கள் உயிரை இழப்பதை பெரும் கௌரவமாகக் கருதும் கிறிஸ்தவர்கள் இன்றும் பெரும் எண்ணிக்கையில் இருப்பது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.