2014-05-01 10:06:15

அமைதி ஆர்வலர்கள் – 1921ல் நொபெல் அமைதி விருது(Hjalmar Branting, Christian Lange)


ஏப்.30,2014. Karl Hjalmar Branting, Christian Lous Lange ஆகிய இருவரும் 1921ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டவர்கள். சுவீடன் நாட்டவரான Karl Hjalmar Branting(நவ.23,1860-பிப்.24,1925) சுவீடனில் சோஷலிசத்தின் தந்தை என அழைக்கப்படுபவர். இவர் ஓர் அரசியல்வாதி. 1907ம் ஆண்டு முதல் 1925ம் ஆண்டு வரை சுவீடன் நாட்டின் சமூக சனநாயக கட்சியின் தலைவராகவும், 1920, 1921 முதல் 1923 வரை, 1924 முதல் 1925 வரை ஆகிய மூன்று காலக் கட்டத்தில் சுவீடனின் பிரதமராகவும் பணியாற்றியவர். 1920ம் ஆண்டில் Branting பிரதமராகப் பொறுப்பேற்றபோது, சுவீடன் சமூக சனநாயக கட்சியிலிருந்து முதன்முறையாக இப்பதவிக்கு வந்தவர் என்ற பெருமையை இவர் பெற்றார். 1921ம் ஆண்டில் Branting பிரதமராகப் பொறுப்பேற்றபோது ஐரோப்பாவில் முதல் சோஷலிச அரசியல்வாதியாகவும் இருந்தார். Stockholmல் பேராசிரியரின் ஒரே மகனாகப் பிறந்த Branting, அந்நகரிலே கல்வி பயின்று, பின்னர் Uppsala பல்கலைகழகத்திலும் பயின்றார். 17வது வயதில் கணிதத்திலும் இலத்தீனிலும் மிகத் திறமையானவராக விளங்கினார். இவர் கணித வானியலில் அறிவை வளர்த்துக்கொண்டு, 1882ம் ஆண்டில் Stockholm வானியல் ஆய்வு மையத்தில் உதவியாளராகப் பணி செய்தார்.
1881ம் ஆண்டில் Stockholm தொழிலாளர் நிறுவனத்துக்கு அந்நகர நிர்வாகம் நிதியுதவி செய்ய மறுத்தது. இந்நிறுவனம் வேலைசெய்யும் ஆண்களுக்குப் பயிற்சிகளும் சொற்பொழிவுகளும் வழங்கி வந்தது. முற்போக்குச் சிந்தனைகளை வளர்த்துக்கொண்ட Branting, தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து இந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட உதவினார். பாரிசில் ப்ரெஞ்ச் சோஷலிசவாதி Paul Lafargue; சூரிச்சில் ஜெர்மன் சோஷலிசவாதி Eduard Bernstein உட்பட இவர் சென்ற இடங்களிலெல்லாம் சோஷலிச உரைகளைக் கேட்டார். இரஷ்யா உட்பட பல இடங்களில் தொழிலாளர்கள், சமூக மெய்யியல் மேதைகள் ஆகியோருடன் உரையாடினார். இதனால் அறிவியல் பணியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு 1884ம் ஆண்டில் Tiden அதாவது The Times என்ற Stockholm முற்போக்குப் பத்திரிகையின் அலுவலகராகச் சேர்ந்தார். 1886ம் ஆண்டில் Socialdemokraten என்ற சோஷலிச தினத்தாளின் முதன்மை ஆசிரியரானார். தொழிலாளர் கல்வி பாடப் புத்தகத்தை வெளியிட்டார். மேலும், சுவீடன் அரசியலில் வல்லமைமிக்க சக்தியாக இந்த தினத்தாள் மாறியது. சமய உணர்வுகளை அவமதிக்கும் ஒரு கட்டுரையை வெளியிட்டதால் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார் Branting.
புரட்சிகள் பற்றிச் பேசுவதைவிட, பரிணாம வளர்ச்சி பற்றி அதிகம் பேசினார் Branting. தொழிலாளர்களின் உயிர்த்துடிப்புள்ள ஈடுபாடின்றி உண்மையான சனநாயகம் நிலைக்காது என்பதையும், சனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டிராத எந்த சோஷலிசத் தத்துவமும் கேலிக்குரியதே என்பதையும் இவர் உறுதியாக நம்பினார். சோஷலிசம் சனநாயக வளர்ச்சிக்கு உதவுவது என்று இவர் சொல்வார். இந்த சோஷலிச இயக்கத்தின் ஆசிரியர் மட்டுமல்ல, அதற்கு ஆட்களையும் சேர்த்தார் Branting. இவர் தொழிலாளர் அமைப்பை உருவாக்கினார். அவர்கள் தொழிற்சங்கங்கள் நடத்த உதவினார். வேலை நிறுத்தங்கள் செய்வதற்கு ஆதரவு வழங்கினார். இந்தத் துறையில் எண்ணற்ற கூட்டங்களில் சிறந்த பேச்சாளரானார். எதிலும் துல்லியமாகச் செயல்பட்டு, இதமான, நேர்மையான மனிதராகத் திகழ்ந்தார் Branting. 1889ம் ஆண்டில் ஆண்கள் சமூக சனநாயக தொழிற் கட்சி உருவாகச் சிறந்த ஆலோசனைகள் வழங்கிய இவர், அதன் தலைவராக, 1907ம் ஆண்டிலிருந்து இறக்கும்வரை செயல்பட்டார். நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட Branting தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்துலக விவகாரங்களில் Branting காட்டிய ஆர்வம், முதல் உலகப் போரின் போதும் அதற்குப் பின்னும் அதிகரித்தது. சுவீடன் நாடு சமநிலை காக்க வேண்டுமென்பதை வலியுறுத்தினார். தொழிற்சங்கங்களுடன் அனைத்துலக அளவில் ஒருமைப்பாட்டை வளர்த்தார். 1919ம் ஆண்டில் பாரிஸ் அமைதிக் கருத்தரங்கில் சுவீடனின் பிரதிநிதியாகப் பங்கெடுத்தார். நாடுகளின் கூட்டமைப்பு ஒப்பந்தம் உருவாக ஆலோசனை வழங்கினார். 1920 முதல் 1921ம் ஆண்டுவரை, அந்தக் கூட்டமைப்பின் ஆயுதக்களைவு குழுவின் தலைவராக இருந்தார். 1924ம் ஆண்டில், ஆயுதக்களைவு குறித்த அக்குழுவின் உறுப்பினரானார். 1923ம் ஆண்டில் கிரேக்க-இலத்தீன் போர் முடிவடைவதற்கான செயல்பாட்டில் இவர் பங்குகொண்டார். நீதிக் கோட்பாடுகளின் அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பு அமைக்கப்பட வேண்டுமென்பதை இவர் நம்பினார். Branting, போரொழிப்புக் கோட்பாட்டாளர் எனப் பாராட்டப்படுகிறார்.
1921ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்நது கொண்ட நார்வே நாட்டைச் சேர்ந்த Christian Lous Lange, பன்னாட்டு அளவில் இடம்பெறும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, தூதரக அளவில் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவதன் மூலமே அமைதியை உருவாக்க முடியும் என்றும் கூறியவர். அரசுகள் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால் நன்மையையும் தீமைகளையும் கொண்டுவர முடியும் என்பதை முதல் உலகப் போர் உலகினருக்குக் கற்றுக் கொடுத்த காலம் அது. இந்தப் போர் முடிந்ததும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் Woodrow Wilson நாடுகளின் கூட்டமைப்பு உருவாவதற்கு அயராது கடுமையாக உழைத்தார். இதன்மூலம் உலகில் இனிமேல் போரைத் தவிர்க்க முடியும் என்று நம்பினார். இக்கூட்டமைப்பில் நார்வே பிரதிநிதியாக விறுவிறுப்புடன் செயல்பட்டவர் Christian Lange. முதல் உலகப் போரின்போது, பெல்ஜியத்தில் இருந்த IPU என்ற நாடுகளுக்கு இடையேயான நாடாளுமன்ற கழகத்தை ஜெர்மனி ஆக்ரமித்தபோது, Lange ஆஸ்லோவில் தனது வீட்டில் இந்தக் கழகத்தின் தலைமையகத்தை நிறுவினார். முதல் உலகப் போரின்போது பல அனைத்துலக அமைப்புகள் அழிந்தபோது, இவரின் முயற்சியினால் IPU கழகம் அழிவினின்று தப்பித்தது. Christian Lange, நார்வே நாட்டு வரலாற்று ஆசிரியர், அறிவியல் அரசியல்வாதி. நார்வே நாடாளுமன்றத்தின் நொபெல் விருதுக் குழுவில் ஒருவராக இருந்தவர். சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் அமைதியை ஊக்குவிக்க Christian Lange எடுத்த முயற்சிகளைப் பாராட்டி இவருக்கு 1921ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. இவரின் மகள் Thoraவும் தந்தை வழிநின்று செயல்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது நாத்சி ஜெர்மனி நார்வேயை ஆக்ரமித்தபோது அதற்கு எதிராக இவர் போராடினார். இதனால் 1943ம் ஆண்டு செப்டம்பரில் வதைப்போர் முகாமுக்கு அனுப்பப்பட்டு அங்கு நோயினால் இறந்தார் Thora.
அரசுகள் ஒன்றிணைந்து உழைத்தால் இந்த உலகுக்கு நன்மையைக் கொணர முடியும், அதேசமயம் தீமைகளையும் கொண்டுவர முடியும்.








All the contents on this site are copyrighted ©.