2014-04-30 16:51:41

அதிக நார்ச்சத்து கொண்ட உணவு மாரடைப்பு மீண்டும் வருவதைத் தடுக்கும் - ஆய்வு


ஏப்.30,2014. மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது நலப் பிரிவு நடத்திய ஆய்வில், மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 வருடங்களுக்கு பிறகும் ஆரோக்கியமாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பழக்கம் அந்த பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தில் வரக்கூடிய, உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது.
நார்ச்சத்து, பெரும்பாலும் அதிகமாக பழங்களிலும் காய்கறிகளிலும் மற்றும் முழு தானியங்களிலும் காணப்படுகிறது என்பதும், அது குடலுக்கு மிகவும் நல்லது என்பதும் ஏற்கனவே எல்லோரும் அறிந்த ஒரு விடயம் எனினும், பல நாடுகளில் உள்ள மக்கள் அதனை போதுமான அளவு உட்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.