2014-04-29 18:44:12

விவிலியத் தேடல் – பரிசேயரும் வரிதண்டுபவரும் உவமை – பகுதி - 6


ஏப்ரல் 27, RealAudioMP3 கடந்த ஞாயிறு உரோம் நகரும், கத்தோலிக்கத் திருஅவையும் அனுபவித்த ஓர் உன்னதமான நிகழ்வின் நினைவுகள் உள்ளத்தை நிறைத்துள்ளன. 2000 ஆண்டுகளாய் திருஅவை கடந்து வந்துள்ள பயணத்தில் இதுவரை இடம்பெறாத ஒரு நிகழ்வு இது. வாழும் இரு திருத்தந்தையர் பங்கேற்ற ஒரு திருப்பலியில், மறைந்த இரு திருத்தந்தையர் புனிதர்கள் என்று அறிவிக்கப்பட்டனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக வத்திக்கான் பல வரலாற்றுச் சாதனைகளின் மையமாகியுள்ளது. ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தந்தை ஒருவர் தன் தலைமைப் பொறுப்பைத் துறந்தது; அமெரிக்கக் கண்டத்திலிருந்து முதன்முறையாக ஒருவர் திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டது என்று வரலாற்றுச் சாதனைகள் வத்திக்கானை வலம் வந்தவண்ணம் உள்ளன.
வரலாற்றுப் பெருமைகளைப் பறைசாற்றுவது என் நோக்கமல்ல. இந்த நிகழ்வுகளெல்லாம் எளிய மனம் கொண்ட ஆன்மீகத் தலைவர்களை மையப்படுத்தியிருந்தன என்பதே நான் இவற்றை இன்று பேசுவதன் முக்கிய நோக்கம்.
ஏப்ரல் 27ம் தேதி, உரோம் நகரில் ஏறத்தாழ 8 முதல் 10 இலட்சம் மக்கள் வரை கூடியிருந்தனர் என்று ஊடகங்கள் கணித்துள்ளன. இந்த எண்ணிக்கையைக் கேள்விப்பட்டபோது, இவர்களில் பாதிக்கு மேற்பட்டோரை வத்திக்கானுக்கு அருகில் கண்ணாரப் பார்த்தபோது, என் உள்ளத்தில் எழுந்த வியப்பு இதுதான்: இத்தனை இலட்சம் மக்களை, அதுவும் இளையோரை ஆன்மீகம் தொடர்பான விடயங்கள் இன்னும் ஈர்த்துவருகின்றனவே என்ற வியப்பு.
51 ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகைவிட்டுப் பிரிந்த 82 வயதான ஒரு திருத்தந்தையும், 8 ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகைவிட்டுப் பிரிந்த 85 வயதான ஒரு திருத்தந்தையும் இத்தனை இலட்சம் மக்களை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திற்கு அழைத்து வந்தனர் என்பது வியப்பான ஒரு செய்திதான்.
முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான், முத்திப்பேறு பெற்ற 2ம் ஜான்பால் என்ற இரு திருத்தந்தையரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதராக உயர்த்துகிறார் என்ற செய்தி, கடந்த ஆறு மாதங்களாக கத்தோலிக்கத் திருஅவை என்ற வட்டத்தையும் தாண்டி, உலகின் பல கோடி மக்களை மகிழ்வித்தச் செய்தி. இச்செய்திக்குக் கிடைத்த வரவேற்பு, இவ்வுலகில் ஆன்மீக விழுமியங்கள் இன்னும் மறையவில்லை என்பதைப் பறைசாற்றியது.
புனிதர்களான 23ம் ஜான், 2ம் ஜான்பால், என்ற இரு திருத்தந்தையரையும், தற்போது தலைமைப் பொறுப்பில் பணியாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் ஒப்பிட்டு, பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். இம்மூவரையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நம் மனதில் எழும் முதல் ஒப்புமை - இவர்களிடம் காணப்பட்ட எளிமை. இம்மூவரும் மக்கள் மனங்களில் ஆழமானத் தாக்கங்களை உருவாக்க அடிப்படைக் காரணமாக இருந்தது, அவர்களிடம் விளங்கிய பணிவும், எளிமையும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஏப்ரல் 27 அன்று இந்த மூன்று திருத்தந்தையரையும் இணைத்த மற்றொரு அம்சம் - இறை இரக்கத்தின் ஞாயிறு. உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை இறை இரக்கத்தின் ஞாயிறென்று 2000மாம் ஆண்டு உருவாக்கினார், புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2005ம் ஆண்டு இறை இரக்க ஞாயிறுக்கு முந்திய இரவு அவர் இறையடி சேர்ந்தார். 6 ஆண்டுகளுக்குப் பின், அதே இறை இரக்க ஞாயிறன்று அவர் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்பட்டார். 9 ஆண்டுகளுக்குப் பின், அதே இறை இரக்க ஞாயிறன்று அவர் புனிதராகவும் உயர்த்தப்பட்டார்.
இவ்விரு திருத்தந்தையரையும் புனிதர்களாக உயர்த்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏன் 'இறை இரக்கத்தின் ஞாயிறை'த் தேர்ந்தெடுத்தார் என்று கேட்டபோது, அவர் "இவ்வுலகம் என்றுமில்லாத அளவுக்கு இரக்கத்தை இழந்து தவிக்கிறது. எனவே, நாம் வாழும் உலகிற்கு 'இரக்கத்தின் காலம்' (the age of mercy) மிக அதிகமாகத் தேவைப்படுகிறது" என்று பதில் சொன்னார். 'இரக்கத்தின் கால'த்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் பறைசாற்றிய இரு திருத்தந்தையரை இறை இரக்க ஞாயிறன்று புனிதர்களாக அறிவித்தது மிகப் பொருத்தமாகத் தெரிகிறது. அவர்களைப் புனிதர்களாக உயர்த்தியவரையும் 'இரக்கத்தின் தூதர்' என்று அழைக்கலாம். இரக்கமே அனைத்துப் புண்ணியங்களிலும் தலைசிறந்தது என்றும், இறைவன், இரக்கம் காட்டுவதில் சலிப்படைவதே இல்லை என்பதையும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் கூறிவருபவர் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மூன்று திருத்தந்தையருக்கும் பொதுவான அம்சங்களாக விளங்கும் எளிமை, இறை இரக்கம் என்ற இரு எண்ணங்களையும் 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' என்ற உவமையில், இயேசு சித்திரித்துள்ள பரிசேயரின் வார்த்தைகளில் காணலாம். "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" (லூக்கா 18: 13) என்று வரிதண்டுபவர் சொன்ன அந்த நான்கு வார்த்தைகள், கிறிஸ்தவ ஆன்மீகப் பாரம்பரியத்தில் ஆழமானத் தாக்கங்களை உருவாக்கியுள்ளன.
கிறிஸ்தவ ஆன்மீக ஆசிரியர்கள் பலர் சொல்லித்தரும் ஓர் அற்புத செப முறையின் பெயர் Jesus Prayer என்றழைக்கப்படும் 'இயேசு மந்திரம்' அல்லது 'இயேசு செபம்'. இந்திய மண்ணில் உருவான 'நாம செபம்' என்ற வழிமுறையை ஒத்ததாய் அமைந்துள்ள இந்த செப முறையில், இயேசுவின் திரு நாமத்தை மீண்டும், மீண்டும் சொல்லி அந்த வார்த்தையில், அந்த வார்த்தைச் சுட்டிக்காட்டும் இயேசுவில் ஆழ்ந்து போவது இந்த செபத்தின் இலக்கு.
அதேபோல், இயேசுவின் வாழ்வும் வார்த்தைகளும் பதிந்துள்ள நற்செய்தியை மையப்படுத்தி அல்லது விவிலியத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் மற்றொரு செப முறையில், விவிலிய வார்த்தைகள் மீண்டும், மீண்டும் சொல்லப்படுவதால், அந்த வார்த்தைகள் நமக்குள் ஆழ்ந்த தாக்கங்களை உருவாக்கும் என்று ஆன்மீக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இந்த செப முறைக்கு அவர்கள் எடுத்துக்காட்டாகக் கூறும் இரு கூற்றுகள், லூக்கா நற்செய்தியின் 18ம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளன. "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்று வரிதண்டுபவர் சொன்ன அந்த நான்கு வார்த்தைகள் ஓர் எடுத்துக்காட்டு. மற்றொன்று, அதே 18ம் பிரிவின் இறுதியில் இயேசுவிடம் குணம் பெற விழையும் பார்வையற்ற ஒருவர் கூறும் மன்றாட்டு: "இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" (லூக்கா 18: 38)
பல நூற்றாண்டுகளாக செப முறைகளின் ஆணிவேராக விளங்கும் "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" "இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்ற இவ்விரு மன்றாட்டுக்களும் இறைவனின் இரக்கத்தை வேண்டும் செபங்கள். இவ்விரு நற்செய்தி கூற்றுகளும் நமக்குச் சொல்லித்தரும் ஒரு எளிய, முக்கியமான பாடம் இதுதான்... இறைவனின் இரக்கத்தை, கருணையைப் பெறுவதற்கு பல வார்த்தைகளைப் பயன்படுத்தத் தேவையில்லை என்பதே அந்தப் பாடம். இவ்விரு நற்செய்தி கூற்றுகளும் அவ்வப்போது நம் செபங்களாக மாறினால், நல்ல விளைவுகளை நாம் அனுபவிக்க முடியும்.
பரிசேயர் சொன்னது 27 வார்த்தைகள் என்றும், வரிதண்டுபவர் சொன்னது நான்கே வார்த்தைகள் என்றும் சென்ற வாரம் குறிப்பிட்டோம். பரிசேயர் கூறிய 27 வார்த்தைகளில், 'கடவுளே' என்ற அந்த முதல் வார்த்தைக்குப் பின் அவர் கூறியதெல்லாம் தன்னைப் பற்றியே.
இதற்கு மாறாக, வரிதண்டுபவர் தன்னைப்பற்றி அதிகம் பேசவில்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: "இறைவா, இதோ நான், இதுதான் நான், இவ்வளவுதான் நான்." தன் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளுதல், அதனை ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய அம்சங்கள் உண்மையான தாழ்ச்சியின் கூறுகள். இந்தத் தன்னறிவில், அடுத்தவரை இணைக்காமல், ஒப்பிடாமல் சிந்திப்பது இன்னும் உயர்ந்ததொரு மனநிலை.
தலை சிறந்த ஏழு புண்ணியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது தாழ்ச்சி. இந்தப் புண்ணியத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. "தனக்கு தாழ்ச்சி உள்ளது என்று ஒருவர் நினைக்கும் அந்த நொடியில் இந்தப் புண்ணியம் தொலைந்து போகிறது. 'நான் தாழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக அடைந்தேன்' என்ற தலைப்பில் இதுவரை ஒரு நூல் வெளிவந்ததில்லை. அப்படி ஒரு நூல் வெளிவந்தால், அதைவிட முரண்பாடு ஒன்று இருக்க முடியாது." என்று ஓர் அறிஞர் தன் பெயரைக் குறிப்பிடாமல் (Anonymous) கூறியுள்ளார்.
தன் அகந்தையினால் பார்வை இழந்து, இறைவனின் நியமங்களைக் காப்பதாக எண்ணி, கிறிஸ்தவர்களை அழித்துக் கொண்டிருந்த திருத்தூதர் பவுல் அடியார், பரிசேயர் பரம்பரையில் வந்தவர். இறைவனின் இரக்கத்தால் தொடப்பட்டதும், அவரிடம் உருவான மாற்றங்களை அழகாகக் கூறியுள்ளார். பவுல் அடியாரின் வார்த்தைகள் இன்றைய நம் தேடலை நிறைவு செய்யட்டும்:
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12 : 9-10
கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.








All the contents on this site are copyrighted ©.