2014-04-28 16:44:13

இளைஞர் மாநாட்டிற்கு திருத்தந்தையின் செய்தி


ஏப்,28,2014. இயேசுவால் தேர்ந்தடுக்கப்பட்ட சீடர்களும் தவறிழைத்தனர், ஆனால், உயிர்த்த இயேசுவைச் சந்தித்தபின் உரம்பெற்று திருஅவைக்காக துன்பங்களை ஏற்கும் மனநிலையைப் பெற்றனர் என இளைஞர்களுக்கு ஒலி-ஒளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டினாவின் Buenos Aires நகரில் இடம்பெற்ற அப்பகுதி இளைஞர் மாநாட்டிற்கென தன் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ' எவை குறித்தும் அஞ்சாமல் சுதந்திர உணர்வுடன் இறைவனுக்குப் பணியாற்றவேண்டிய இளையோரின் கடமையை வலியுறுத்தியுள்ளார்.
இயேசுவின் சீடரான பேதுரு அவரை மறுதலித்தார், யூதாசு அவரைக் காட்டிக்கொடுத்தார், எனையச் சீடர்களோ அவரை விட்டுவிட்டு ஓடினர், இருப்பினும் அவரின் சீடர்களே நற்செய்தியை பரப்புவதில் எண்ணற்ற சித்ரவதைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர் என இளைஞர்களுக்கு அனுப்பிய தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் பாதையை பின்பற்ற விரும்பினாலும் தன் சொத்துக்களை இழக்க விரும்பாததால் கவலையுடன் இயேசுவிடமிருந்து விடைபெற்றுச் சென்ற பணக்கார இளைஞன், ஊதாரி மகன் உவமையில் கூறப்பட்டுள்ள இளைய மகன், உயிர்பெற்ற நயீன் விதவையின் மகன் போன்றவர்களை தன் செய்தியில் சுட்டிக்காட்டி, தென் அமெரிக்க இளைஞர்களுக்கு ஊக்கத்தை வழங்கியுள்ளார் திருத்தந்தை.
விவிலியத்தில் காணப்படும் பெண்களின் துணிச்சலையும் உதாரணமாக எடுத்தியம்பி இளம்பெண்களுக்கு வழங்கியுள்ள ஊக்கமும் திருத்தந்தையின் இச்செய்தியில் இடம் பெற்றுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.