2014-04-27 14:17:49

வரலாற்று சிறப்புமிக்க புனிதர் பட்டமளிப்பு விழாவில் உரோம் நகர்


ஏப்.27,2014. புனித வாரம், உயிர்ப்புப் பெருவிழா என திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வந்த திருப்பயணிகளால் உரோம் நகரம் ஏற்கனவே குலுங்கிக் கொண்டிருக்க, இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற இரு திருத்தந்தையர்களின் புனிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த திருப்பயணிகளால் உரோம் நகர நிர்வாகம் திக்குமுக்காடிவிட்டது. எட்டு இலட்சம் முதல் 10 இலட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக உரோம் நகர் மேயர் மரினோ தெரிவித்திருக்க, உண்மையில் வந்திருந்த கூட்டத்தின் எண்ணிக்கை 10 இலட்சத்தை எளிதாகத் தாண்டியிருக்கும். சில செய்தி நிறுவனங்கள், இவ்வெண்ணிக்கை 12 இலட்சத்தைத் தாண்டியிருந்தது என்கின்றன. விடியற்காலை 5.30 மணிக்கு தூய பேதுரு வளாகம் திறக்கப்படும்வரை மக்கள் கூட்டம் 12 மணிநேரத்திற்கு மேல் அமைதியாகக் காத்திருந்தது, அவர்கள் உரோம் நகருக்கு வந்த நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. இரவில் காகித அட்டைகளை விரித்தும், விரிப்புகளைப் பயன்படுத்தியும் தூங்கிய இளைஞர் கூட்டமும், இந்நிகழ்வுக்கென இரவில் திறந்து வைக்கப்பட்டிருந்த கோவில்களில் செபித்துக் கொண்டிருந்த கூட்டமும், தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் கூட்டமிகுதியினால் நின்றுகொண்டே தூங்கிய கூட்டமும், காலை 5.30 மணிக்கெல்லாம் தயாராகிவிட்டது. குடிக்க தண்ணீர் பாட்டில் விநியோகமும், நவீன கழிப்பறை வசதிகளும் செய்த உரோம் நகர் நிர்வாகத்தை நாம் பாராட்டியே ஆகவேண்டும். சுயவிருப்பப்பணியாளர்களும் மஞ்சள் உடை அணிந்து அனைத்துப்பகுதிகளிலும் நின்று திருப்பயணிகளுக்கு உதவிக்கொண்டிருந்தனர். நான்கு திருத்தந்தையர்கள் தொடர்புடைய விழா இது. வரலாற்றில் இரு திருத்தந்தையர்கள் ஒரு திருப்பலியை நிறைவேற்றுவதும், இரு திருத்தந்தையர்களுக்கு ஒரே நாளில் புனிதர் பட்டம் வழங்கப்படுவதும் இதுவே முதன்முறை. ஒரு திருத்தந்தை இரண்டாம் வத்திக்கான சங்கம் மூலம் விசுவாசிகளை திருஅவைக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவந்தார். இன்னொரு திருத்தந்தையோ உலகப் பயணங்கள் மூலம் திருஅவையை நாடுகளின் மக்களுக்கு அருகே எடுத்துச் சென்றார். இவ்விரு திருத்தந்தையர்கள் 23ம் ஜானும், இரண்டாம் ஜான் பாலும் இரக்கத்தின் ஞாயிறான இஞ்ஞாயிறன்று புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். போலந்திலிருந்து வந்த மக்கள் தங்கள் சிகப்பு வெள்ளை வண்ண தேசியக் கொடியைத் தாங்கியவர்களாக பெருமெண்ணிக்கையில் காணப்பட்டனர். கோவிலுக்கு முன்புறம் அரை கிலோ மீட்டருக்குமேல் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்திருக்க, குறுக்குப் பாதைகள், டைபர் நதியின் கரைகள், அதன் குறுக்குப் பாலங்கள் என எங்கும் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்ததால் அவர்கள் அனைவரும் இத்திருப்பலி நிகழ்வைக் காணும்பொருட்டு, ஆங்காங்கே பிரமாண்ட் திரைகள் வைக்கப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் மக்களுக்கு ஒளிபரப்புச் செய்யப்பட்டது. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இறந்தபோது அவர் உடலை தரிசிக்க வந்த கூட்டத்தை விட இது குறைவே என்றாலும், ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய கூட்டம் ஒரே இடத்தில் கூடியது உரோமின் அண்மை வரலாற்றில் இதுவே முதன்முறை என்று சொல்லலாம்.
யூதர்களை தங்கள் மூத்த சகோதரர்கள் என்று அழைத்து மதநல்லிணக்கத்தை வளர்த்த இந்த இரு திருத்தந்தையர்களின் புனிதர் பட்டமளிப்பு விழாத் திருப்பலியில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 20 யூதமதத்தலைவர்கள் சிறப்புப் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. உலகின் அனைத்து மக்களின் மனங்களிலும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்விருத்திருத்தந்தையர்களும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டத் திருப்பலியில், உலகின் ஏறத்தாழ அனைத்து நாடுகளையும் சேர்ந்த திருப்பயணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.