2014-04-27 14:17:00

புனிதர் பட்டத் திருநிகழ்வும், திருப்பலியும்


ஏப்.27,2014. புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் காலை 8 மணிக்கு, வத்திக்கான் இசைக்குழுவினர், வழிபாட்டுப் பாடல்களைப் பாட ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து, இறை இரக்க மன்றாட்டு வழிபாடும் இடம்பெற்றது.
காலை ஒன்பது மணிமுதல் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள், மற்றும் அரசுப் பிரதிநிதிகள் வளாகத்திற்கு வருகை தந்தவண்ணம் இருந்தனர்.
9.30 மணியளவில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், வளாகத்திற்கு வந்தபோது, மக்கள் ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர். முன்னாள் திருத்தந்தையும் புன்முறுவலுடன் அதை ஏற்றுக்கொண்டார். வளாகத்தில் கூடியிருந்த சில தலைவர்கள், முன்னாள் திருத்தந்தை அவர்களைத் தனிப்பட்ட வகையில் சந்தித்து, தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
9.45 மணியளவில், புனிதர்கள் மன்றாட்டு பாடப்பட்ட வேளையில், 150க்கும் அதிகமான கர்தினால்கள் குழு, திருப்பலி உடையுடன் புனித பேதுரு பசிலிக்காவிலிருந்து ஊர்வலமாக வெளியே வந்தனர். இந்த ஊர்வலத்தின் இறுதியில் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியைத் துவக்குவதற்கு முன்னதாக, அங்கு அமர்ந்திருந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து வாழ்த்தினார். இச்சந்திப்பு, மக்கள் மத்தியில் பெரும் கரவொலியை உருவாக்கியது.
திருப்பலியின் துவக்க நிகழ்வாக, புனிதர் பட்ட நிலை படிகளுக்கான திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலொ அமாத்தோ அவர்கள், திருத்தந்தையின் முன் நின்று, விண்ணப்பமொன்றை விடுத்தார்:
"திருத்தந்தையே, அன்னையாம் திருஅவை உங்களிடம் விண்ணப்பிக்கிறார். முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான், 2ம் ஜான்பால் ஆகிய இருவரையும் புனிதர்களாக உயர்த்தி, உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் அவர்களை வணங்குவதற்கு ஆவன செய்யவேண்டும்" என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் விண்ணப்பித்தார்.
இந்த முதல் விண்ணப்பத்தைக் கேட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "நம் இதயங்களை இறைவனிடம் எழுப்பி செபிப்போம். அன்னைமரியா, மற்றும் ஏனைய புனிதர்களின் பரிந்துரையோடு, நாம் மேற்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான செயலை இறைவன் ஆசீர்வதிக்குமாறு மன்றாடுவோம்" என்று கூறினார். இதைத் தொடர்ந்து, வளாகத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்கள், அமைதியில் செபித்தனர்.
இரண்டாவது முறையாக, கர்தினால் அமாத்தோ அவர்கள், திருத்தந்தையின் முன்னிலையில் தன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார்.
இவ்விண்ணப்பத்தை செவிமடுத்த திருத்தந்தை, நாம் இதனைச் செயல்படுத்த, தூய ஆவியாரின் துணையை வேண்டுவோம் என்று அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, தூய ஆவியாரின் வருகையை வேண்டி, "வாரும் தூய ஆவியாரே" (Veni Creator Spiritus) என்ற பாரம்பரியப் பாடல் பாடப்பட்டது.
இப்பாடலின் இறுதியில், மீண்டும் ஒருமுறை, கர்தினால் அமாத்தோ அவர்கள் திருத்தந்தையின் முன்னிலையில் நின்று, ‘தூய ஆவியாரின் துணையையும், திருப்பீடத்தின் படிப்பிக்கும் உன்னத நிலையையும் நம்பி, இவ்விருவரையும் புனிதர்கள் வரிசையில் சேர்க்கும்’படி திருத்தந்தையிடம் மூன்றாவது முறையாக விண்ணப்பித்தார்.
மும்முறை விடுக்கப்பட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்வரும் வார்த்தைகளை அறிக்கையிட்டார்:
"மூவொரு இறைவனின் மகிமைக்காகவும், கத்தோலிக்க நம்பிக்கையின் மேம்பாட்டிற்காகவும், கிறிஸ்தவ வாழ்வின் வளர்ச்சிக்காகவும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தாலும், புனிதத் திருத்தூதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் அதிகாரத்தாலும், நம்முடைய சொந்த அதிகாரத்தாலும், செபத்துடன் நாம் மேற்கொண்ட பல ஆலோசனைகளாலும், உடனுள்ள சகோதர ஆயர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலாலும், முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான், மற்றும் முத்திப்பேறு பெற்ற 2ம் ஜான்பால் ஆகிய இருவரையும், புனிதர்கள் வரிசையில் இணைப்பதாக அறிக்கையிடுகிறோம். தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே" என்று திருத்தந்தை கூறியதைத் தொடர்ந்து, மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன், "ஆமென்" என்ற முழக்கத்தை மும்முறை இசைவடிவில் அளித்தனர். மக்களின் கரவொலி ஒரு சில நிமிடங்கள் நீடித்தன.
இதுவே, முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான், 2ம் ஜான்பால் ஆகிய இரு திருத்தந்தையரையும் புனிதர்கள் என்று அறிவித்த வழிமுறை.
இதைத் தொடர்ந்து, இசைக் குழுவினர், "மகிழ்வோடு இறைவனைப் புகழ்ந்து பாடுங்கள்" என்ற பாடலை இசைத்தபோது, புதியப் புனிதர்கள், 23ம் ஜான், மற்றும் 2ம் ஜான்பால் ஆகியோரின் திருப்பண்டங்கள் அடங்கிய இரு பேழைகள் திருத்தந்தையிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றை மிகுந்த வணக்கத்துடன் திருத்தந்தை முத்தமிட்டதும், அப்பண்டங்கள் பீடத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறப்பு மேடையில் வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, "உன்னதங்களிலே" என்ற பாடலுடன், திருப்பலி தொடர்ந்தது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.