2014-04-25 16:08:32

வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமை - கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ்


ஏப்.25,2014. வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமை என்பதால், நான் உரோம் நகர் செல்லும் பயணத்தையும் தள்ளிவைத்து, என் கடமையை நிறைவேற்றினேன் என்று மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
ஏப்ரல் 24, இவ்வியாழனன்று இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்ற வாக்களிப்பின் ஒருபகுதியாக மும்பை நகரில் வாக்களித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அமையவிருக்கும் அரசுக்காக செபித்தபடி, தான் வாக்களித்ததாக ஆசிய செய்தியிடம் கூறினார்.
சமய அதிகாரத்தையும், சமுதாய அதிகாரத்தையும் இயேசு தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார் என்றும், உறுதியான இந்தியாவை உருவாக்கும் கடமை அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் உள்ளது என்றும் கர்தினால் கிரேசியஸ் தெளிவுப்படுத்தினார்.
எண்ணிக்கை என்ற அளவில் கத்தோலிக்கத் திருஅவை மிகவும் குறைந்திருந்தாலும், கல்வி, நலவாழ்வு ஆகிய இரு முக்கியத் துறைகள் வழியே இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை இந்தியாவைக் கட்டியெழுப்பியுள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
உலகிலேயே மிகப்பெரும் குடியரசான இந்தியாவில், 81 கோடியே 40 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களித்துவருவது, மக்களின் சக்தியை இவ்வுலகிற்கு உணர்த்தும் ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று கர்தினால் கிரேசியஸ் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம்: AsiaNews








All the contents on this site are copyrighted ©.