2014-04-25 15:58:12

நேபாளத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக அருள் பணியாளர் பால் சிமிக் நியமனம்


ஏப்.25,2014. நேபாள நாட்டின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக இதுவரைப் பணியாற்றி வந்த இயேசு சபையைச் சேர்ந்த ஆயர் அந்தோனி பிரான்சிஸ் ஷர்மா அவர்கள், பணியிலிருந்து ஒய்வுபெறுவதாக சமர்ப்பித்த விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று ஏற்றுக் கொண்டார்.
ஆயர் ஷர்மாவுக்குப் பதிலாக, டார்ஜிலிங் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள் பணியாளர் பால் சிமிக் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நேபாளத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமித்துள்ளார்.
1963ம் ஆண்டு, டார்ஜிலிங் பகுதியில் பிறந்த பால் சிமிக் அவர்கள், கொல்கத்தாவின் 'அதிகாலை விண்மீன்' குருத்துவப் பயிற்சி மையத்தில் தன் அருள் பணியாளர் பயிற்சியைப் பெற்றார்.
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், உரோம் நகர், உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில், விவிலிய இறையியலில் முனைவர் பட்டமும் பெற்ற அருள் பணியாளர் சிமிக் அவர்கள், 1992ம் ஆண்டு, அருள் பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
2 கோடியே, 86 இலட்சம் மக்களைக் கொண்ட நேபாள நாட்டில், 7,950 கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர். 71 அருள் பணியாளர்களும், 170 துறவியரும் இந்நாட்டில் பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.