2014-04-25 16:04:54

திருத்தந்தை பிரான்சிஸ் - சவால்களைச் சந்திக்க, படைப்பாற்றல் மிக்க வழிகளை, ஆயர்கள் தேடவேண்டும்


ஏப்.25,2014. தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, சுவாசிலாந்து ஆகிய நாடுகளில் மறைப் பணியாளர்கள் விதைத்த நம்பிக்கை விதைகளை, மண்ணின் மைந்தர்களான ஆண்களும், பெண்களும் பேணி வளர்த்துள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, சுவாசிலாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றும் ஆயர்கள், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது, அந்நாடுகளில் நிலவும் பல்வேறு சவாலானச் சூழல்களிலும், கத்தோலிக்கத் திருஅவையின் வளர்ச்சி நிறைவு தருகின்றது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
ஆயர்களுடன் தான் மேற்கொண்ட தனிப்பட்டச் சந்திப்புக்களில், அவர்கள் தெரிவித்த சவால்களான, மணமுறிவு, கருக்கலைப்பு, கத்தோலிக்கர் பிற மதங்களை நாடிச் செல்லுதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சவால்களைச் சந்திக்க, படைப்பாற்றல் மிக்க வழிகளை, ஆயர்கள் தேடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அருள் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதை மற்றுமொரு சவாலாக எடுத்துரைத்தத் திருத்தந்தை, இறையழைத்தலை ஊக்குவித்தல், தகுதியான இளையோரைத் தெரிவு செய்தல், அவர்களுக்குச் சிறந்த பயிற்சி அளித்தல் ஆகிய வழிமுறைகளை ஆயர்கள் ஆய்வு செய்யவேண்டும் என்று விண்ணப்பித்தார்.சமுதாய வாழ்வில் பெருகிவரும் ஊழல், நாடுவிட்டு நாடு செல்வோரின் எண்ணிக்கை, நன்னெறி வாழ்வில் தோய்வு ஆகியப் பிரச்சனைகளை ஆயர்கள் தகுந்த வகையில் எதிர்கொள்வர் என்ற நம்பிக்கையையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் இறுதியில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.