2014-04-25 16:05:47

திருத்தந்தை பிரான்சிஸ் - அமெரிக்கக் கண்டத்திற்கு புனித இஞ்ஞாசியார் அனுப்பிவைத்த முதல் இயேசு சபை பணியாளர் 19 வயது நிரம்பாத சிறுவன்


ஏப்.25,2014. அமெரிக்கக் கண்டத்தில் கிறிஸ்துவை அறிவிக்க, புனித இஞ்ஞாசியார் அனுப்பிவைத்த முதல் இயேசு சபை பணியாளர் 19 வயது நிரம்பாத சிறுவன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் மாலை ஆற்றிய ஒரு மறையுரையில் கூறினார்.
இம்மாதம் 3ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதரென அறிவித்த மூவரில், இயேசு சபையைச் சேர்ந்த José de Anchieta அவர்களும் ஒருவர். இப்புனிதருக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உரோம் நகர், புனித இஞ்ஞாசியார் பேராலயத்தில் இவ்வியாழன் மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனிதரின் இளமையை வியந்து மறையுரை வழங்கினார்.
உயிர்ப்புக் காலத்தில் நாம் கேட்டுவரும் திருப்பலி வாசகங்களில், 'வியப்பு' என்ற உணர்வு மேலோங்கி உள்ளதென்பதை, இவ்வியாழன் வழங்கப்பட்ட வாசகங்களுடன் தொடர்புபடுத்தி, தன் மறையுரையில் திருத்தந்தை கூறினார்."பிரேசில் நாட்டின் திருத்தூதர்" என்றழைக்கப்படும் இயேசு சபை அருள் பணியாளர் Anchieta அவர்களை, திருத்தந்தை புனிதராக அறிவித்தது, இயேசு சபையினரின் கனவை மட்டுமல்ல, பிரேசில் நாட்டு மக்களின் 400 ஆண்டு கனவையும் நனவாக்கியுள்ளது என்று, பிரேசில் ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் Raymundo Damasceno Assis அவர்கள் எடுத்துரைத்து, திருத்தந்தைக்கு நன்றி பகர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.