2014-04-25 16:09:22

ஐ.நா. அவையின் சுற்றுச்சூழல் ஓவியப்போட்டியில், இலங்கைச் சிறுமி வெற்றி


ஏப்.25,2014. ஐ.நா. அவையின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்காக ஆசிய பசிபிக் பகுதியில் நடத்தப்பட்ட சிறார் ஓவியப்போட்டியில், இலங்கையைச் சேர்ந்த எட்டு வயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகள், ஐ.நா. அவையின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்தின் சார்பில் நடத்தப்படுகின்றன.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்க, இவ்வாண்டு, அறிவிக்கப்பட்ட ‘வீணாகும் உணவும் பூமிப்பந்தின் பாதுகாப்பும்’ என்கிற தலைப்பையொட்டி உலக நாடுகள் அனைத்திலிருந்தும் சிறார்களுக்கான ஓவியப்போட்டி ஒன்றை, ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பும், ஜப்பானில் இருக்கும் உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமைப்பும் நிக்கான் நிறுவனமும் இணைந்து நடத்தின. இந்தப் போட்டி பிரிவுக்கு மொத்தம் 63,700 ஓவியங்கள் குவிந்தன.
இப்போட்டியில், இலங்கையைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி கந்தகே கியாரா செனுலி பெரேரா வரைந்த ஓவியம், நடுவர்களைப் பெரிதும் கவர்ந்து, சிறப்பான ஓவியமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக அச்சிறுமிக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசும், நைரோபியில் நடக்கும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு, அவருக்கும், அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியருக்கு விமானப் பயணச் செலவும் வழங்கப்படும்.
அவரது இந்த ஓவியமும் உலகின் மற்ற பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட சிறார் ஓவியங்களும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படுவதோடு, ஐ.நா. அவையின் சுற்றுசூழல் அமைப்பு, உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றின் இணைய பக்கங்களிலும் காட்சிக்கு வைக்கப்படும்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.