2014-04-24 16:28:50

திருத்தந்தை பிரான்சிஸ் - "எளிமையான வாழ்வின் பயனாக, தேவையில் இருப்போருடன் நம்மிடமிருப்பதைப் பகிர்ந்தளிக்க முடியும்"


ஏப்.24,2014. "எளிமையான வாழ்வை மேற்கொள்வது நல்லது; அதன் பயனாக, தேவையில் இருப்போருடன் நம்மிடமிருப்பதைப் பகிர்ந்தளிக்க முடியும்" என்ற செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் Twitter செய்தியாக இவ்வியாழன் வெளியிட்டார்.
மேலும், இவ்வியாழன் மாலை, 6 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள புனித இஞ்ஞாசியார் பேராலயத்தில் நன்றித் திருப்பலியொன்றை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3ம் தேதி, திருத்தந்தையால் புனிதர்களென உயர்த்தப்பட்ட மூவரில், "பிரேசில் நாட்டுத் திருத்தூதர்" என்று வணங்கப்படும் Jose de Anchieta என்ற இயேசு சபை அருள் பணியாளரும் ஒருவர். இவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டதற்காக, உரோம் நகரில் உள்ள இயேசு சபையினருடன் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நன்றித் திருப்பலியை நிகழ்த்துகிறார்.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் தனிப்பட்ட தொலைப்பேசி அழைப்புக்கள் குறித்து, திருப்பீட பேச்சாளர் இயேசு சபை அருள் பணியாளர் பெதெரிகோ லோம்பார்தி அவர்கள், செய்தியாளர்களிடம் சில தெளிவான விவரங்களை இப்புதனன்று வெளியிட்டார்.
திருத்தந்தை அவர்கள், தனிப்பட்ட நபர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதை, திருப்பீடம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்காது என்றும், இத்தகைய உரையாடல்களைக் குறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகளுக்கு, திருப்பீடம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது என்றும் அருள் பணியாளர் லோம்பார்தி அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.