2014-04-22 16:02:17

விவிலியத்
தேடல் பரிசேயரும் வரிதண்டுபவரும் உவமை பகுதி - 5


RealAudioMP3 புண்ணிய வாழ்வில் தலைசிறந்த ஒருவர் இறந்தார். அவரை விண்ணக வாயிலருகே வரவேற்ற புனித பேதுரு, அவரிடம், "நீங்கள் விண்ணகத்தில் நுழைவதற்குத் தகுதியுள்ளவர் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். இதைக் கேட்ட புண்ணியவாளர் சிறிது அதிர்ச்சி அடைந்தாலும், விரைவில் சமாளித்துக் கொண்டு, "நிச்சயமாக... விண்ணுலகில் நுழைவதற்கு என்னைவிட தகுதியுள்ளவர் இருக்கமுடியாது" என்று பதிலளித்தார்.
"சரி, உங்கள் தகுதிகளைச் சொல்லுங்கள் நான் மதிப்பெண்கள் வழங்குகிறேன். நீங்கள் 1000 மதிப்பெண்கள் பெற்றால், உள்ளே நுழையலாம்" என்று கூறினார் புனித பேதுரு. புண்ணியவாளர் சிறிதும் தயக்கமின்றி தன் தகுதிகளைப் பட்டியலிட்டார்.
"நான் நாள் தவறாமல் திருப்பலிக்குச் சென்றுள்ளேன்" என்று அவர் ஆரம்பித்ததும், புனித பேதுரு, "சரி, உங்களுக்கு 200 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன" என்றார். உடனே, புண்ணியவாளர், "வாரம் ஒருமுறை உண்ணாநோன்பு இருந்தேன். ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உதவி செய்தேன்" என்று கூறினார்.
புனித பேதுரு மகிழ்வோடு, "உங்கள் மதிப்பெண்கள் 300 ஆக உயர்ந்துள்ளன" என்றார். புண்ணியவாளர் பொறுமை இழக்கத் துவங்கினார். தன் சொத்தில் பாதியை கோவிலுக்கு எழுதி வைத்தது, கோவில் திருவிழா குழுக்களில் தலைமை வகித்தது, முதியோர் இல்லங்களில் பணியாற்றியது, இளையோரை வழிநடத்தியது என்று தன் தகுதிகளை ஒவ்வொன்றாகச் சொன்னார்.
இவை அனைத்தையும் கேட்டு முடித்த புனித பேதுரு, அவரது மதிப்பெண்கள் இன்னும் 50 புள்ளிகள் கூடியுள்ளன என்றும், தற்போது அவர் 350 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்றும் கூறினார். இதைக் கேட்டு, அந்தப் புண்ணியவாளர், உரத்தக் குரலில், "கடவுளே, நீங்கள்தான் என்னைக் காப்பாற்றவேண்டும்" என்று கூறினார்.
உடனே புனித பேதுரு, "இது ஒன்று போதும். நீங்கள் 1000 மதிப்பெண்கள் பெற்றுவிட்டீர்கள்" என்று கூறி, அவரை ஆதரவாய் அணைத்தபடி விண்ணகத்திற்குள் அழைத்துச் சென்றார்.

தன் சொந்த முயற்சிகளால் விண்ணகத்தைத் தன் வழிக்குக் கொணர முடியும் என்று எண்ணிய அந்தப் புண்ணியவாளர், எப்போது தன்னைவிட்டு வெளியேறி, இறைவனின் இரக்கத்தைத் தேடினாரோ, அந்நேரமே, விண்ணகத்தில் நுழையும் தகுதி பெற்றார். இதே எண்ணத்தை, இருவேறு கதாப்பாத்திரங்கள் வழியே இயேசு 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' என்ற தன் உவமையில் விளக்கிக் கூறியுள்ளார்.

தன்னையே மையப்படுத்தி, தன் அருமை, பெருமைகளையெல்லாம் ஆண்டவரிடம் பறைசாற்றிய பரிசேயரைப்பற்றி கடந்த சில வாரங்கள் சிந்தித்து வந்தோம். இன்று நம் தேடலின் மையமாக அமையவிருப்பது வரிதண்டுபவரின் பாவ அறிக்கை.
"கடவுளே, நீங்கள்தான் என்னைக் காப்பாற்றவேண்டும்" என்ற நான்கு வார்த்தைகளால் 1000க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று, விண்ணகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்ட புண்ணியவாளரை மேற்கண்ட கதையில் சந்தித்தோம். அதேபோல், "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" (லூக்கா 18:13) என்ற நான்கு வார்த்தைகள், வரிதண்டுபவருக்கு வாழ்வும், மீட்பும் வழங்கின என்று இயேசு தன் உவமையில் தெளிவாக்கியுள்ளார்.

பரிசேயரும், வரிதண்டுபவரும் கூறிய வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சில தெளிவுகளும் பாடங்களும் வெளிச்சத்திற்கு வருகின்றன:
பரிசேயர் சொன்னது, 27 வார்த்தைகள். வரிதண்டுபவர் சொன்னதோ 4 வார்த்தைகள். 'நறுக்கென்று நாலு வார்த்தைகள்' என்று தமிழில் நாம் பயன்படுத்தும் சொற்றொடரை இந்த நாலு வார்த்தைகள் நினைவுபடுத்துகின்றன.
இருவரும் 'கடவுளே' என்ற வார்த்தையுடன் தங்கள் கூற்றைத் துவங்கியுள்ளனர். இந்த முதல் வார்த்தையால் இருவருமே செபிப்பதுபோன்ற ஓர் எண்ணத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால், அவர்கள் பயன்படுத்திய ஏனைய வார்த்தைகளில், அவர்கள் சொன்னது செபமா அல்லது சுய விளம்பரமா என்ற கேள்விகள் எழுகின்றன.
பரிசேயர் சொன்ன மீதி 26 வார்த்தைகளில், தன்னை, பிறரோடு ஒப்பிட்டுப் பேசிய வார்த்தைகளே (16) அதிகம். வரிதண்டுபவரோ தன்னை யாரோடும் ஒப்பிடாமல், 'தான் ஒரு பாவி' என்பதை மட்டும் இரு வார்த்தைகளில் கூறியுள்ளார்.
பரிசேயர், மற்றவர்களைவிட தான் உயர்ந்தவர் என்று தானே முடிவெடுத்து, அதற்காக, இறைவனுக்கு நன்றியும் கூறியுள்ளார். தன் அகந்தையால் இறைவன் உள்ளத்தைக் காயப்படுத்தியது போதாதென்று, அந்தக் காயத்தில் உப்பைத் தேய்ப்பதுபோல், இறைவனுக்கு நன்றியும் கூறுகிறார்.
வரிதண்டுபவரோ, தன் உண்மை நிலையை இறைவனிடம் கூறி, அவரது இரக்கத்தை இறைஞ்சுகிறார். இந்த உண்மையும், பணிவும் இறைவன் உள்ளத்தைக் குளிர்விக்கிறது; அவர் எழுப்பிய செபம் கேட்கப்படுகிறது.

உண்மையை உணர்தல், அதை ஏற்றுக் கொள்ளுதல் என்ற உணர்வுகள் நமக்கு விடுதலை அளிக்கும். இதை இயேசு மற்றொரு நற்செய்திப் பகுதியில் இவ்வாறு கூறியுள்ளார்:
யோவான் நற்செய்தி 8: 31-32
இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்என்றார்.
உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்என்று இயேசு கூறிய இந்த வார்த்தைகள், உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு தாரக மந்திரமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த வார்த்தைகளின் அடிப்படையில் பல சிந்தனையாளர்களும் உண்மையைப் பற்றி கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
உலகின் தலைசிறந்த நாவலாசிரியர் என்று கருதப்படும் லியோ டால்ஸ்டாய் அவர்கள், இயேசுவின் வார்த்தைகளால், குறிப்பாக, அவரது மலைப்போழிவினால் அதிகம் கவரப்பட்டவர். அவர் உண்மையைப் பற்றி கூறுவது இதுதான்: உண்மை, பொன்போன்றது. அதைச் சுற்றியுள்ள அழுக்கையெல்லாம் நீக்கிவிட்டால், அது தானாகவே ஒளிரும் Truth, like gold, is to be obtained not by its growth, but by washing away from it all that is not gold. ~ Leo Tolstoy.
வரிதண்டுபவரின் உள்ளத்தில் உண்மை இறைவன் எப்போதும் குடிகொண்டிருந்தார். ஆனால், அந்த உண்மையைச் சுற்றி அவர் சேர்த்திருந்த பல அழுக்குகள் அந்த உண்மையை வெளிவர விடாமல், ஒளிர விடாமல் தடுத்திருந்தன. அவர் கோவிலில், இறைவன் பிரசன்னத்தில் தன் உள்ளத்தைத் திறந்து அழுக்குகளை அகற்றியதும், அவருக்குள் இருந்த உண்மை இறைவன் பொன்னென ஒளிர்ந்தார், அவருக்கு விடுதலைத் தந்தார்.

Prussia நாட்டு அரசர், Frederick, ஒருநாள் சிறைக் கைதிகளைச் சந்திக்கச் சென்றார். அரசரைக் கண்டதும், அங்கிருந்த கைதிகள், தங்கள் உள்ளக் குமுறல்களை அவரிடம் கொட்ட ஆரம்பித்தனர். தான் செய்யாத குற்றத்திற்காகச் சிறைதண்டனை அனுபவிப்பதாக ஒருவர் கூறினார். நீதிபதி தன் வழக்கைச் சரியாக விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கியதாக அடுத்தவர் கூறினார். தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை அங்கிருந்தவர்கள் பலரும் அடுத்தடுத்து அரசரிடம் கூறினர். அரசர் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டார். சிறையில் இருந்த ஒருவர் மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அரசர் அவரை அணுகி, "நீயும் எக்குற்றமும் செய்யாமல் இவர்களைப் போல் மாட்டிக் கொண்டவன்தானே?" என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், "இல்லை, மன்னா. நான் தவறு செய்தேன்; அதற்குரிய தண்டனையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னார். இதைக் கேட்டதும், அரசர், சிறை அதிகாரிகளிடம், "இந்தக் குற்றவாளியை உடனே வெளியில் அனுப்புங்கள். இவன் இங்கிருந்தால், சிறையில் உள்ள மற்ற குற்றமற்ற அப்பாவிகளை இவன் கெடுத்துவிடுவான்" என்று கட்டளையிட்டார்.
அரசனைக் கண்டதும், தங்கள் அருமை பெருமைகளைக் கூறிய கைதிகள், அதன் பலனை அனுபவிக்கப் போவதாகக் கனவு கண்டனர். இதற்கு மாறாக அமைந்தது அந்த ஒரு கைதியின் நடத்தை. அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டவனாகவே இருந்தாலும் சரி, அந்தக் கைதி தன் உண்மை நிலையைச் சொன்னது, நமக்குச் சில பாடங்களைச் சொல்லித் தருகின்றது. வரிதண்டுபவர் நறுக்கென்று சொன்ன நாலு வார்த்தைகளில் நாம் கற்றுக்கொள்ளும் பாடமும் இதுதான்... அரசன் ஆனாலும், ஆண்டவனே ஆனாலும் சரி... இதுதான் நான் என்று பணிவுடன், துணிவுடன் சொல்பவர் மீட்படைவர் என்பதே அந்த முக்கியப் பாடம்.

பரிசேயர் கூறிய 27 வார்த்தைகளில் இறைவனிடம் அவர் எதுவுமே கேட்கவில்லை. தன்னைப் பற்றிய பெருமைகளைப் பறைசாற்றுவதிலேயே குறியாய் இருந்த அவருக்கு, கடவுளிடம் கேட்பதற்கு எதுவும் இல்லாமல் போனது. ஆனால், வரிதண்டுபவரோ ஆண்டவரிடம் இரக்கத்தைக் கேட்கிறார், பெறுகிறார். பணிவான மனதோடு உண்மைகளைச் சொல்வதற்கு, இறைவன் மீது அளவற்ற நம்பிக்கையும், அதனால் பிறக்கும் துணிவும், வேண்டும். இவ்விரு அற்புத குணங்களும் வரிதண்டுபவரிடம் இருந்தனவென்பதை அவர் கூறிய அந்த நாலு வார்த்தைகள் தெளிவாக்குகின்றன.

தற்போது திருஅவையை வழிநடத்திச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையால், பணிவோடும், துணிவோடும் இன்றைய உலகிற்குத் தேவையான உண்மைகளைக் கூறிவருகிறார். Jorge Mario என்ற இயற்பெயரைத் தாங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஜார்ஜ் அவர்களின் பெயரைத் தாங்கியதால், ஏப்ரல் 23, இப்புதனன்று, தன் நாம விழாவைக் கொண்டாடுகிறார். இவ்வேளையில், அவருக்கு இறைவன் நீடிய ஆயுளையும், நல்ல உடல், மற்றும் மன வலிமையைத் தந்து, பணிவோடும், துணிவோடும் பல்லாண்டுகள் திருஅவையை நடத்திச் செல்லும் வரங்களைப் பொழிய மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.