2014-04-22 16:02:11

புனிதரும் மனிதரே - பறவை நாகத்தை வென்ற இளம்வீரர் – புனித ஜார்ஜ்


"மனிதர்கள் மத்தியில் மதிப்பும் வணக்கமும் பெற்றுள்ள இவரைக் குறித்து சொல்லப்பட்டுள்ள பல வீர, தீரச் செயல்கள் இறைவனுக்கு மட்டுமே தெரியும்" என்று திருத்தந்தை ஒருவர், ஓர் இளைஞனைப் பற்றிக் கூறியுள்ளார்.
ஆம், 5ம் நூற்றாண்டில் திருஅவைத் தலைவராக இருந்த புனித முதலாம் ஜெலாசியுஸ் அவர்கள், 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஜார்ஜ் என்ற இளைஞனைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.
படைத்தளபதியின் உடையணிந்து, குதிரை மீது அமர்ந்திருக்கும் ஓர் இளைஞன், கீழே நெளியும் ஒரு பறவை நாகத்தை ஈட்டி கொண்டு தாக்குவதைப் போல் அமைந்துள்ள புனித ஜார்ஜ் அவர்களின் ஓவியம், பல கதைகளுக்கு ஊற்றாக அமைந்துள்ளது. ஒரு சில ஓவியங்களில், இவ்விளைஞருக்கும், பறவை நாகத்திற்கும் பின்புலத்தில், ஓர் இளம்பெண் இருப்பது போலவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பெண், உண்மைக்கு, அல்லது வளர்ந்துவரும் கிறிஸ்தவ மறைக்கு ஓர் அடையாளம் என்பது பரவலான கருத்து.
பாலஸ்தீன நாட்டில், கிரேக்க உயர்குடியில், 275 அல்லது, 285ம் ஆண்டு பிறந்தவர் ஜார்ஜ். இளவயதில், உரோமையப் பேரரசன் Diocletian படையில் இணைந்தார். மன்னன் Diocletian கிறிஸ்தவர்களை வேட்டையாடத் துவங்கியபோது, அதை வன்மையாகக் கண்டனம் செய்த இளம்வீரர் ஜார்ஜ், தானும் ஒரு கிறிஸ்தவர் என்பதை பகிரங்கமாக அறிவித்தார்.
மன்னன் Diocletian, அவருக்கு மரணதண்டனை வழங்கியதும், இளையவர் ஜார்ஜ், தன்னிடம் இருந்த அனைத்துச் செல்வங்களையும் ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு, தன் மரணத்தை எதிர்கொண்டார். மிகக் கொடூரமானச் சித்திரவதைகளுக்கு ஜார்ஜ் உள்ளாக்கப்பட்டாலும், அவர் உயிருடன் இருந்ததைக் கண்ட மன்னன், இறுதியில் அவரது தலையை வெட்டிக் கொல்லுமாறு ஆணையிட்டார்.
அதன்படி, 303ம் ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி, 30 வயது நிரம்பாத இளம்வீரர் ஜார்ஜ், கிறிஸ்துவுக்காக, தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தார். கொடூரச் சித்திரவதைகள் மத்தியிலும், இளைஞர் ஜார்ஜ் காட்டிய துணிவும், அமைதியும் சூழ இருந்தவர்கள் பலரைப் பாதித்தன. அவர்களில், உரோமைய அரசி அலெக்சாண்ட்ராவும், உரோமையக் கடவுள்களுக்கு வழிபாடுகள் நடத்திய அரச குருக்களில் ஒருவரான அத்தனேசியஸ் அவர்களும் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.
திருஅவை வரலாற்றில், புகழ்பெற்ற புனிதர்களில் ஒருவராக ஜார்ஜ் கருதப்படுகிறார். ஜார்ஜியா, இங்கிலாந்து, எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் உட்பட, 20 நாடுகளும், பார்சலோனா, மாஸ்கோ, ரியோ டி ஜனெய்ரோ உட்பட, 24 பெருநகரங்களும் புனித ஜார்ஜ் அவர்களை, தங்கள் காவலராகக் கொண்டுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருமுழுக்கு பெற்றபோது, புனித ஜார்ஜ் அவர்களின் பெயரை ஏற்று, Jorge Mario என்று அழைக்கப்பட்டார். எனவே, ஏப்ரல் 23, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நாம விழாவைக் கொண்டாடுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.