2014-04-22 16:55:37

தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் குழந்தைக்கும் உரிமைகள் உண்டு, அலபாமா உயர் நீதிமன்றம்


ஏப்.22,2014. தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் குழந்தைக்கும் ஏனைய குழந்தைகள் போல் முழு உரிமைகள் உண்டு என புதிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலபாமா மாநில உயர் நீதிமன்றம்.
கருக்கலைப்புக் குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளுக்குச் சவால் விடுவதாக அமைந்துள்ள இந்த மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பு, கருவில் உருவானது முதல் குழந்தைகளைக் காப்பாற்றவேண்டிய சமூகத்தின் கடமைகளை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
கருத்தாங்கியிருந்த தாய் ஒருவர் Cocaine எனப்படும் போதை மருந்தை உட்கொண்டதால் வயிற்றிலிருந்த குழந்தை இறந்ததையொட்டி தொடரப்பட்ட வழக்கில், கருவில் வளரும் குழந்தைக்கும் வாழ்வதற்குரிய முழு உரிமையும் மாண்பும் உள்ளது என தீர்ப்பு வழங்கியுள்ளது அலபாமா உயர் நீதிமன்றம்.
குழந்தை என்று கூறும்போது, தாயின் வயிற்றில் கருவில் வளரும் உயிரையும் அது உள்ளடக்குகின்றது எனக் கூறும் இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு, இறைவனால் வழங்கப்பட்ட இயற்கையான உரிமைகளை மாற்றவோ, அழிக்கவோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை எனவும் எடுத்துரைக்கிறது.
கருவில் வளரும் குழந்தைகளின் கூறுபடா உரிமைகள் குறித்து தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகள் Roy Moore மற்றும் Tom Parker என்ற இருவரும் கருத்து தெரிவிக்கையில், வாழும் உயிர்களுக்கு இருக்கும் உரிமையை வழங்குவது இறைவனேயன்றி மனிதர்கள் அல்ல என்பதால் அதனை மனிதர்கள் மீறமுடியாது எனக் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Catholic Online








All the contents on this site are copyrighted ©.