2014-04-22 16:47:22

இந்திய ஆயர் பேரவைத் தலைவரின் உயிர்ப்புப் பெருவிழாச் செய்தி


ஏப்.22,2014. கிறிஸ்துவின் சீடர்கள் என்ற முறையில் துன்பங்களையும் தியாகங்களையும் சந்திக்கவேண்டியிருந்தாலும் நற்செய்தியின் வழி நடக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.
அண்மையில் கொண்டாடப்பட்ட உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் மார் பசிலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கல் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியை, ஆசிய செய்தி நிறுவனம் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.
இந்தியர்களாகிய நமக்கு 'கடவுள் நம்மோடு' என்ற வடிவில் இறைவன் எப்போதும் உடன் இருக்கிறார், குறிப்பாக, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் அவர் வாழ்கிறார் என்று கர்தினால் தொட்டுங்கல் அவர்கள் கூறியுள்ளார்.
கிறிஸ்துவின் உயிர்ப்புக்குச் சான்று பகரும் வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டுள்ள நாம், நம்பகத்தன்மை உடையவர்களாக வாழவேண்டிய கடமையைப் பெற்றுள்ளோம் என்று கர்தினால் தொட்டுங்கல் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர்களாக நாம் கருதப்பட்டாலும், உலகில் அமைதி, புதிய விழுமியங்கள் ஆகியவற்றைக் கொணரும் கடமையிலிருந்து கிறிஸ்துவர்களாகிய நாம் பின்வாங்கக்கூடாது என்றும் இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.