2014-04-21 14:53:54

இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது, மத்திய வங்கி அறிக்கை


ஏப்.21,2014. இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலையில்லா திண்டாட்டம் பற்றி கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் விரிவுரையாளர் இராஜேஸ்வரன் இராஜேஸ் கண்ணன் அவர்கள், இன்றைய இளைஞர்கள் தமக்குப் பொருத்தமான வேலைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.
அத்துடன், தமது கல்வித்தரத்திற்கும் அவரவர் துறைசார்ந்த வகையிலும் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இளைஞர்கள் இருப்பதாகவும், இதனால், சில வேளைகளில் பலர் தங்கள் தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இன்னுமொரு பிரிவினர் எவ்விதமான தொழிலையும் பெற்றுக்கொள்ள முடியாமல் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு வேலைவாய்ப்புக்காகத் தமது பெயர்களைப் பதிவு செய்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வேலைவாய்ப்புப் பயிற்சிகளை அரசு வழங்கிவருகின்ற போதிலும், இளைஞர்கள் அந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி தமக்கென நிரந்தரமான தொழில் வாய்ப்புகளைப் பெற முடியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் இராஜேஸ் கண்ணன் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.