2014-04-18 13:30:17

திருத்தந்தையின் Twitter செய்தி - "இயேசுவை மிக நெருக்கமாகத் தொடர்வது எளிதல்ல"


ஏப்.18,2014. "இயேசுவை மிக நெருக்கமாகத் தொடர்வது எளிதல்ல; ஏனெனில், அவர் தேர்ந்துள்ள பாதை, சிலுவைப் பாதை" என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித வெள்ளியன்று காலை வெளியிட்டார்.
மேலும், 'பாராமரிக்கும் புனித மரியன்னை' என்ற இல்லத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய புனித வியாழன் மாலைத் திருப்பலியில், 16 வயது முதல், 86 வயது முடிய உள்ள பன்னிருவரின் காலடிகளைக் கழுவினார் என்று திருப்பீடச் செய்தி அலுவலகம் அறிவித்துள்ளது.
பன்னிருவரில் ஒன்பது பேர் இத்தாலியர் என்றும், ஏனைய மூவர் லிபியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களில், லிபியாவைச் சேர்ந்த 75 வயதான Hamed என்பவர், ஒரு முஸ்லிம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிருவரில், மிக இளவயதுடைய Osvaldinho, சென்ற ஆண்டு கடலில் குளிக்கச் சென்றபோது, அடிபட்டு, கழுத்துக் கீழ் செயலனைத்தையும் இழந்து கிடப்பவர் என்றும், இதேபோல், பல்வேறு வழிகளில் உடல் திறன் குறைவுள்ள பன்னிருவரின் காலடிகளை திருத்தந்தை கழுவினார் என்றும் கூறப்படுகிறது.
முத்திப்பேறு பெற்ற அருள் பணியாளர் Gnocchi அறக்கட்டளை நடத்தும் 'பராமரிக்கும் புனித மரியன்னை' காப்பகம், உரோம் நகரில் பல ஆண்டுகளாகச் செயலாற்றி வருகிறது.
இத்தாலியின் மிலான் நகரில் துவக்கப்பட்ட இவ்வறக்கட்டளை, தற்போது இத்தாலியின் பல நகரங்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கு காப்பகங்கள் பலவற்றை நடத்தி வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.