2014-04-16 15:51:29

திருத்தந்தையின் புதன் பொது மறையுரை


ஏப்.16,2014. இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் அதன் உச்சகட்டமான உயிர்ப்பையும் கொணரும் புனிதவாரத்தில் இருக்கின்றோம் நாம். இப்புனித வாரத்தின் புதனன்று உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு, புனித வார நிகழ்வுகள் குறித்தே தன் மறையுரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாரம் உரோம் நகரில் திருத்தந்தையுடன் இடம்பெறும் புனிதவார நிகழ்வுகளிலும், 20ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உயிர்ப்புப் பெருவிழாச் சடங்குகளிலும், அதற்கடுத்த வாரம் 27ம் தேதி, இறை இரக்கத்தின் ஞாயிறன்று, முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான், மற்றும், இரண்டாம் ஜான்பால் ஆகிய இரு திருத்தந்தையரும் புனிதர்களாக அறிவிக்கப்படும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து திருப்பயணிகள் உரோம் நகர் வந்தவண்ணம் உள்ளனர். இவர்களின் பெருமெண்ணிக்கையிலான பங்கேற்புடன் திருத்தந்தையின் புதன் பொது மறையுரை நிகழ்ச்சி இடம்பெற்றது. இயேசுவின் பாடுகள் மற்றும் உயிர்ப்பு குறித்த அவரின் மறையுரைக்கு இப்போது செவிமடுப்போம்.
அன்பு சகோதர சகோதரிகளே, இப்புனித வாரத்தின் புதனன்று வழங்கப்பட்டுள்ள திருப்பலி வாசகம், யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்த நிகழ்வு குறித்து எடுத்துரைத்து, இயேசுவின் பாடுகளைத் துவக்கி வைக்கின்றது. நம்மீது கொண்ட பேரன்பால் இயேசுகிறிஸ்து தன்னையேக் கையளித்து, தாழ்ச்சியின் பாதையில் சுயவிருப்பத்துடன் நம் மீட்புக்காக நடைபோட்டார். புனித பவுல் கூறுவதுபோல், 'அவர் தம்மையே வெறுமையாக்கி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும், சிலுவைச்சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக் கொண்டார் (பிலிப் 2:7-8). இயேசுவின் பாடுகள் குறித்து தியானிக்கும்போது, மனிதகுலம் அனைத்தின் துன்பங்களும் அங்கு பிரதிபலிப்பதை நாம் பார்ப்பதோடு, தீமை, துன்பம் மற்றும் மரணம் என்ற விளங்காதப் புதிர்களுக்கு இறைவன் வழங்கும் பதில்களையும் நாம் புரிந்துகொள்கிறோம்.
இறைவன் தன் மகனை நமக்குக் கொடுத்தார். அவர் நமக்காகத் தாழ்நிலையேற்று, காட்டிக்கொடுக்கப்பட்டு, கைவிடப்பட்டு, இகழ்ச்சிகளை ஏற்று இறந்தார். இருப்பினும் மனித வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், கடவுளின் வெற்றியானது, தோல்வியிலும் வீழ்ச்சியிலும் ஒளிவீசுகின்றது. இயேசுவின் பாடுகள் என்பது தந்தையாம் இறைவனின் முடிவற்ற அன்பை இயேசு வெளிப்படுத்தியதன் உச்சகட்டம், மற்றும் இயேசுவின் வார்த்தைகளில் நாம் விசுவாசம் கொள்வதற்காக விடப்படும் அழைப்பு. நமக்கு விடுதலை வழங்குவதற்காக இயேசுகிறிஸ்து தீமையின் சக்தியை தன் தோள்மேலேயே சுமந்துகொள்கிறார். 'அவரின் காயங்களின்வழி நாம் குணம்பெற்றோம்' (1பேதுரு 2:24). இவ்வாரத்தில் இயேசுவின் சிலுவைப்பாதையைப் பின்பற்றும் நாம், இறைவிருப்பத்திற்கு அன்புடன் கீழ்ப்படிபவதில் இயேசுவைப் பின்பற்ற, குறிப்பாக நம் துன்பநேரங்களிலும் நாம் தாழ்நிலைப்படுத்தப்படும் நேரங்களிலும் அவரது எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி, ஒப்புரவு, மீட்பு மற்றும் புதுவாழ்வு எனும் கொடைகளுக்கு நம் இதயங்களைத் திறப்போமாக.
இவ்வாறு தன் புதன் பொதுமறையுரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.