2014-04-15 16:13:34

தென் சூடானில் பெரும் எண்ணிக்கையில் பட்டினிச் சாவுகள் இடம்பெறும் ஆபத்து


ஏப்.15,2014. வரும் மேமாதத்திற்குள் தென் சூடான் நாட்டுக்கு, போதிய உணவு உதவிகள் அனுப்பப்படவில்லையெனில், பெரும் பஞ்சத்தால் பட்டினிச் சாவுகள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக, ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1980ம் ஆண்டுகளுக்குப் பின், தென் சூடானில் பெரும் எண்ணிக்கையில் பட்டினிச் சாவுகள் இடம்பெறும் ஆபத்து இருப்பதாகக் கூறும் அதிகாரிகள், 37 இலட்சம் பேர் உணவின்றி தவிப்பதாகவும், இவர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.
2011ம் ஆண்டு தனி நாடாக விடுதலை பெற்ற தென் சூடானில், அரசுக்கு எதிராகப் புரட்சிக் குழுக்களின் போராட்டமும், வட பகுதியின் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களும் தொடர்வதால், மக்கள் விவசாய நிலங்களை கைவிட்டு, அகதிகளாக வெளியேறி வருவதன் காரணமாக, பஞ்சம் நிலவும் சூழல் அந்நாட்டில் அதிகரித்துள்ளது.
உணவு, குடிநீர், தானிய விதைகள் ஆகியவற்றுடன், நாட்டில் நிலையான வாழ்வுக்கு உரியச் சூழலும் தேவைப்படுகின்றன என்று ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : CatholicOnline








All the contents on this site are copyrighted ©.