2014-04-14 16:19:26

வாரம் ஓர் அலசல் – வெற்றியின் படிகள் கடும் முயற்சிகள்


ஏப்.14,2014. RealAudioMP3 இராபர்ட் ஸ்மித் தேனீக்கள் பிரியர். ஒவ்வொரு தேனீயும் கூட்டை விட்டு வெளியே வருவதற்கு அவை நடத்தும் கடும் போராட்டத்தையும், அச்சமயத்தில் அவற்றின் உடலிலிருந்து வெளிவரும் திரவத்தையும், அதன் சதைகள் உறுதிப்படுவதையும் தினமும் கவனித்து வந்தார். ஒருநாள் அவர், தேனீக்கள்மீது இரக்கப்பட்டு இரு புதிய தேனீக்களின் கூட்டை இலேசாகக் கத்தரித்துவிட்டார். உடனடியாக அந்த தேனீக்கள் கூட்டைவிட்டு வெளியே வந்தன. ஆனால், அவற்றால் இறக்கைகளை விரித்துப் பறக்க முடியவில்லை. ஏனெனில், தேனீக்கள் கூட்டுகளை விட்டு வெளியே வருவதற்கு இயற்கையாகவே அவை கடுமையாகப் போராட வேண்டும், கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இந்த இரு தேனீக்களுக்கும் அந்தப் போராட்டம் இல்லாததால், எளிதில் வெளியே வந்தன. உடனடியாக இறந்தும் விட்டன. தேனீக்களின் வாழ்வில், போராட்டங்களும், இன்னல்களும், பதட்டங்களும், சவால்களும் இயற்கையின் நியதியாகும். அவற்றின்மூலம் அவை வாழ்வுக்குத் தேவையான சக்தியையும், திடனையும் பெறுகின்றன. தேனீக்களின் வாழ்வில் மட்டுமல்ல, ஒவ்வோர் உயிரினத்தின் வாழ்வுப் பயணமும் அவ்வாறே. மனித வாழ்வும் இதில் விதிவிலக்கல்ல. குறிப்பாக, புகழின் உச்சியை எட்டியவர்களின் வாழ்வில் இது முற்றிலும் உண்மையாக இருப்பதைக் காண முடிகின்றது.

எடுத்துக்காட்டாக, இசைஞானி இளையராஜா குடும்பத்தினர் இசைத்துறையில் உச்சத்தை எட்டுவதற்கு அவர்கள் நடத்திய வாழ்வுப் போராட்டம், சென்னை கோல்டன் பீச்சுக்குச் சொந்தமான வி.ஜி.பி. சகோதரர்களின் தொடக்ககால வாழ்வுப் போராட்டம் பற்றிச் சொல்லலாம். உலகின் மிகச் சிறந்த இசை மேதைகளில் ஒருவரான லுட்விக் ஃபான் பீத்தோவன் அவர்கள், ஆஸ்ட்ரியப் பேரரசர், பேரரசி உட்பட மிக முக்கிய தலைவர்களால் அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் அவர் தனது இசைத்திறமையை வெளிப்படுத்தியபோது அவர் புகழின் உச்சிக்குச் சென்றார் எனக் கூறலாம். ஆனால் இவர் இந்தப் புகழை ஒரே இரவில் எட்டவில்லை. அதற்கு அவர் பல சவால்களையும் கடினமான போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. 1770ம் ஆண்டில் ஆஸ்ட்ரியாவில் பிறந்த பீத்தோவன் இளவயதிலே இசையில் வல்லவராய் இருந்தார். இவரது திறமையை அறிந்த இவரது தந்தை இவருக்கு, முதல் இசை ஆசிரியரானார். ஆனால் மிகவும் கண்டிப்பான ஆசிரியராகவும் இருந்தார். சிறுவன் பீத்தோவன், பல நேரங்களில் ஆர்கன் இசைக்கருவி அருகில் கண்ணீரோடு நிற்பாராம். குடும்பத்தில் போதிய அளவு பணம் இல்லாததால் பீத்தோவனின் இசைத் திறமையை வளர்ப்பதற்கும், அவருக்கு சத்தான உணவு கொடுக்கவும் அவரது பெற்றோரால் இயலவில்லை. அவரைத் தாக்கிய அம்மை நோயால் அவர் முகத்தில் தழும்புகள். அதனால் தழும்புகள் நிறைந்த இவரது முகத்தை மற்றவர்கள் அவ்வளவாக ஏறிட்டுப் பார்ப்பதில்லை. ஜோஸ்பின் என்ற பணக்காரப் பெண் முதலில் இவரை விரும்பினாலும், பின்னர் தனது குடும்ப கவுரவத்தால் பீத்தோவனைக் கைவிட்டார். இதைவிட துன்பம் என்னவெனில், பீத்தோவன் இளவயதிலேயே சிறிது சிறிதாக கேட்கும் திறனை இழந்தார். பெரிய இசை மேதையாக ஆகவேண்டுமெனக் கனவு கண்டவருக்கு, அதற்குரிய திறமைகளைக் கொண்டிருந்தவருக்கு இப்படியொரு குறை. ஆனால் அவர் இந்த ஏமாற்றத்திலே துவண்டுவிடவில்லை. பீத்தோவன் எவ்வளவு பெரிய இசைமேதை என்பது உலகம் அறிந்த உண்மை.

2013ம் ஆண்டின் மனிதராக, டைம் இதழ் தேர்ந்தெடுத்த இரங்கசாமி இளங்கோ என்பவர், தமிழகத்தின் Kuthambakkam என்ற கிராமத்தைத் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றியவர். ஒருகாலத்தில் சாதிச் சண்டைக்கும் ஏழ்மைக்கும் பெயர்போன இக்கிராமத்தில் இன்று ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது. இரங்கசாமி அவர்கள் தோற்றுவித்த பஞ்சாயத்து கழகம், தற்போது 150க்கு அதிகமான பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும், 600க்கு அதிகமான சுயஉதவிக் குழுக்களுக்கும் பயிற்சியளித்துள்ளது. Kuthambakkam கிராமத்தில் எல்லாச் சாதியினரும் பிரச்சனையின்றி சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்கின்றனர். தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரங்கசாமி இளங்கோ அவர்கள், இளவயதில் பள்ளிக்குச் செல்வதற்கே கடுமையாய்ப் போராட வேண்டியிருந்தது. மேல்சாதியினர் குடிக்கக்கூட தண்ணீர் கொடுக்கவில்லை. சாப்பாட்டுக்கும் கஷ்டம்தான். ஆனால் அவர் இன்று வேதியியல் பொறியியல் பட்டதாரி. ஒடிசாவில் கிடைத்த வேலையைவிட்டுவிட்டு தனது இளமைக்காலக் கனவுகளை நனவாக்க தனது கிராமம் திரும்பினார். முதலில் தனது கிராமத்தை முன்னேற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தங்களது தொழிலுக்கு இடையூறாய் இருக்கிறார் என்று மேல்தட்டு வர்க்கத்தினரும், சாராய வியாபாரிகளும் இவரை எதிரியாகப் பார்த்தனர். பல முறைகள் அடித்துள்ளனர். கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர். ஆனால் இவர் கடுமையாய் முயற்சித்து வெற்றி பெற்றுள்ளார்.

இம்மாதம் 27ம் தேதி ஞாயிறன்று புனிதர் என அறிவிக்கப்படவிருக்கும் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் இளமைக்காலம் எப்படி இருந்தது? Karol Józef Wojtyla என்ற இயற்பெயரைப் பெற்றிருந்த இவரைச் சிறுவயதிலிருந்தே லோலெக் என்ற செல்லப் பெயரால் அழைத்தனர். இவர் தனது 9வது வயதில் தாயை இழந்தார். அவரது ஒரே உடன்பிறப்பான அண்ணன் எட்மண்ட் இறந்தபோது இவருக்கு வயது 12. இவரது வாலிப வயதில் தந்தையும் இறந்தார். இளவயதிலே யாரும் இல்லாத அனாதையானார். கால்பந்து விளையாட்டு வீரராகிய திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், பனிச்சறுக்கு, நீச்சல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார். மேடை நாடகத்திலும், கவிதை எழுதுவதிலும் திறம்படைத்த இவர், 1938ம் ஆண்டில் போலந்தின் கிராக்கோவ் பல்கலைக்கழகம் சென்றார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டில் ஜெர்மனியின் நாத்சிப் படைகள் போலந்தை ஆக்ரமித்ததால் படிப்பைக் கைவிட்டார். பகலில் நண்பர்களுடன் சேர்ந்து மேடை நாடகங்கள் போட்டார். கல் உடைக்கும் குவாரிகளிலும், வேதியத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்தார். குருவாக வேண்டுமென்ற ஆவலில் கிராக்கோவ் பேராயர் நடத்திய இரகசிய குருத்துவக் கல்லூரியில் படித்தார். இவர் 1978ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருஅவையின் 264வது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 455 ஆண்டுகளுக்குப் பின்னர் இத்தாலியரல்லாத ஒருவர் திருத்தந்தையான பெருமையைப் பெற்றார்.

வெள்ளை மாளிகைக்கு முதலில் சென்ற திருத்தந்தை, யூதர்களின் தொழுகைக்கூடத்துக்குச் சென்ற நவீனகால முதல் திருத்தந்தை, கியூப கம்யூனிச நாட்டுக்குச் சென்ற முதல் திருத்தந்தை, 450 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டனோடு திருப்பீடத்தில் மீண்டும் அரசியல் உறவை உருவாக்கியவர், 1867ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் முறிந்துபோயிருந்த அரசியல் உறவை மீண்டும் 1984ம் ஆண்டு சனவரியில் ஏற்படுத்தியவர், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகியவற்றோடு அரசியல் உறவை உருவாக்கியவர், 483 பேரைப் புனிதர்களாகவும், 1,340 பேரை முத்திப்பேறுபெற்றவர்களாகவும் உயர்த்தியவர், 232 கர்தினால்களை நியமித்தவர், 129 நாடுகளுக்குத் திருப்பயணம் மேற்கொண்டிருப்பவர், 12 மொழிகளைக் கற்றிருந்தவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில் யூதர்கள், கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவர்கள், பெண்கள், ஏழைகள், சிறிபான்மையினர் போன்றோரை திருஅவை தவறாக நடத்தியதற்காக, 2000மாம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மன்னிப்புக் கேட்டவர், 25 ஆண்டுகள் 5 மாதங்கள் திருஅவையை வழிநடத்தியவர்... இப்படி பல புகழுக்கு உரியவர் திருத்தந்தை 2ம் ஜான பால். மரண தண்டனை சட்டத்தை, மனித உரிமை மீறல்களைக் கடுமையாய் எதிர்த்தவர். சமூக நீதிக்காவும், நாடுகளின் வெளிநாட்டுக் கடன் மன்னிப்புக்காகவும் ஓங்கிக் குரல் கொடுத்தவர், 14 அப்போஸ்தலிக்கத் திருமடல்களை எழுதியிருப்பவர், உலகின் துன்பங்கள் பற்றிப் பேசியவர், துன்புறும் மக்கள் சார்பாகக் குரல்கொடுத்தவர். இவர் இறந்த பின்னர் இவரிடம் செபித்த பலர் உடலிலும் உள்ளத்திலும் குணமடைந்துள்ளனர். பார்க்கின்சன் நோயால் இறந்துகொண்டிருந்த ப்ரெஞ்ச் அருள்சகோதரி Marie Simon-Pierre Normand அற்புதமாய் குணமடைந்துள்ளார். மூளைத் தடுமாற்றத்தில் துன்புற்ற 50 வயதுப் பெண் இவரிடம் செபித்துக் குணமடைந்துள்ளார்.

இந்த உலகில் புகழின் உச்சியைத் தொட்டுள்ளவர்களின் வாழ்க்கை கடும் போராட்டங்களும், கஷ்டங்களும் நிறைந்ததாய் இருந்துள்ளது. எதிர்நீச்சல் போட்டே இவர்கள் வாழ்க்கை எனும் பெருங்கடலில் நீந்திக் கரை சேர்ந்துள்ளனர். கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கைப் பயனற்றது என்பதைப் போதிப்பவர்கள் இவர்கள். ஓர் ஏழை விவசாயி ஒருநாள் கடவுளிடம் சண்டை போட்டார். பயிர்களைப் பற்றி உமக்கு என்ன தெரியும், தப்பான நேரங்களில் மழையையும் காற்றையும் வெயிலையும் அனுப்புகிறாய் என்று முறையிட்டார். கடவுளும், சரி, உனது கட்டுப்பாட்டிலே அனைத்தும் இருக்கட்டும் என்றார். விவசாயி விரும்பிய நேரத்தில் மழை, காற்று, பனி, வெயில் என அனைத்தையும் பெற்றார். அறுவடையும் வந்தது. கதிர்களை அறுத்தார் விவசாயி. ஆனால் கதிர்களின் உள்ளே தானியங்கள் இல்லை. அதிர்ந்து போனார் விவசாயி, ஏ, கடவுளே எனக் கோபத்துடன் கூப்பிட்டார் விவசாயி. கடவுள் புன்னகைத்தார். காற்று எனது கட்டுப்பாட்டில் இருந்தபோது வேகமாக வீசும். அப்போது தண்டுகள் எல்லாம் பூமிக்குள் ஆழமாகத் தங்கள் வேர்களை அனுப்பிப் பிடித்துக்கொள்ளும். மழை குறைந்தால் தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் செல்லும். போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு வலுவாக வளரும். எல்லாவற்றையும் வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்குச் சோம்பேறித்தனம் வந்துவிட்டது. தளதளவென்று வளரத் தெரிந்தது. ஆனால் ஆரோக்யமான, பலனுள்ள தானியங்களைக் கொடுக்கத் தெரியவில்லை எனக் கடவுள் சொன்னார்.
ஆம். வாழ்க்கை போராட்டம் இன்றி எளிதாக அமைந்துவிட்டால் அது தானியமற்ற கதிர்கள் போன்று வெற்றிடமாகவே இருக்கும். போராட்டம்தான் வாழ்க்கை. அதைத் துணிச்சலுடன் நீந்துபவர்கள் வெற்றி பெறுகின்றனர். கிறிஸ்துவின் சிலுவைத் துன்பங்களும் மரணமும் இதனையே நமக்குச் சொல்லித் தருகின்றன. சிலுவைக்குப் பின்னர் வெற்றி என்பதை உணருவோம். இந்தப் புனித வாரத்தில் இயேசுவின் திருப்பாடுகளில் பங்குபெறுவோம்.







All the contents on this site are copyrighted ©.