2014-04-14 16:48:39

திருத்தந்தையின் குருத்து ஞாயிறு மறையுரை - கேள்விகளால் நிறைந்த ஓர் ஆன்ம சோதனை


ஏப்.14,2014. "துன்பங்களைத் தாங்கும் இயேசுவுக்கு முன்னால் நான் யாராக இருக்க விரும்புகிறேன்?" என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களிடம் எழுப்பினார்.
ஏப்ரல் 13, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட குருத்து ஞாயிறு பவனியையும், திருப்பலியையும் தலைமையேற்று நடத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரை முழுவதையும் கேள்விகளால் நிறைத்தார்.
இவ்வாரம் முழுவதும் நாம் கொண்டாடும் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மறை நிகழ்வுகளில் நாம் பங்கேற்கப் போகிறோமா அல்லது பார்வையாளர்களாக இருக்கப் போகிறோமா என்ற கேள்வியை, திருத்தந்தை மீண்டும், மீண்டும் எழுப்பினார்.
கிறிஸ்துவின் பாடுகளில் பங்கேற்றவர்களில் பலரது பெயர் நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அவர்களில் பலர் இயேசுவின் பாடுகளைக் குறைக்கும் வகையில் பங்களிப்பைத் தந்தனர் என்றும், வேறு பலர் இயேசுவின் பாடுகளைக் கூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர் என்றும் கூறினார்.
இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவிய சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன், சிலுவையின் அடியில் நின்ற அன்னை மரியா, ஏனைய பெண்கள், இயேசுவின் அடக்கத்திற்கு உதவிய அரிமெத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு, போன்றோரை எடுத்துக்காட்டாகக் கூறி, அவர்களைப் போல நாம் இயேசுவின் பாடுகளில் பயனுள்ளவகையில் பங்கேற்கிறோமா என்ற கேள்வியை எழுப்பினார் திருத்தந்தை.
இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு, பிரச்சனைகள் சூழந்ததும் பொறுப்பிலிருந்து விலகிவிட்ட பிலாத்து, அவரைக் கண்டனம் செய்வதிலேயே குறியாக இருந்த மதத் தலைவர்கள், அவரைத் துன்புறுத்திய வீரர்கள், அவர் சிலுவையில் உயர்த்தப்பட்ட பின்னரும் கேலி செய்த பார்வையாளர்கள் ஆகியோரையும் தன் மறையுரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களில் ஒருவராக நாம் இருக்கிறோமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
மத்தேயு நற்செய்தியிலிருந்து வாசிக்கப்பட்ட இயேசுவின் திருப்பாடுகள் வாசகத்திற்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய குறுகிய மறையுரை, கேள்விகளால் மட்டுமே நிறைந்து, ஓர் ஆன்ம சோதனைபோல அமைந்தது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.