2014-04-14 16:41:27

திருத்தந்தை பிரான்சிஸ் - அருள்பணியாளர்கள், ஒரு நிறுவன அதிகாரிகள் அல்ல


ஏப்.14,2014. அருள்பணியாளர் பணிக்கென பயில்பவர்கள், ஒரு நிறுவனத்தின் அதிகாரத்திற்குரிய பணிக்கென தங்களைத் தயாரிக்கவில்லை, மாறாக, இயேசுவைப்போல் தன் மந்தையை மேய்க்கும் நல்லாயன் பணிக்கென தங்களைத் தயாரிக்கிறார்கள் என்று இத்திங்கள் காலை தன்னைச் சந்தித்த குரு மாணவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரைத் தன்னுள் கொண்டிருக்கும் Lazio மாநிலத்தின் தென் பகுதியில், அருள் பணியாளர்களை உருவாக்கும் Leonianum பாப்பிறைப் பல்கலைக் கல்லூரியிலிருந்து நடைப்பயணமாக வத்திக்கான் வந்திருந்த ஏறத்தாழ 100 குரு மாணவர்களைச் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள் பணியாளர்கள், ஒரு நிறுவன அதிகாரிகளைப் போல் அல்லாமல், மக்களிடையே வாழ்ந்து அவர்களை, தகுந்த மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் கடமையைப் பெற்றுள்ளனர் என்று கூறினார்.
'இது எப்படி நிகழும்?' என்று வானதூதரிடம் அன்னைமரியா கேட்டதுபோல், நாமும், நம் பணிகள் குறித்துச் சிந்திக்கலாம், ஆனால், குயவனாம் இறைவன் கையில் நம்மை களிமண்ணாக ஒப்படைக்கும்போது, நாம் புது உருப்பெறுவது எளிதாக மாறுகிறது என்று மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மக்களை வழிநடத்த நாம் முதலில் செபத்தின் மனிதர்களாக இருக்கவேண்டியத் தேவையை வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருள் அடையாளத்தால் கிடைக்கும் இறை இரக்கத்தை நாம் வாழ்வில் சுவைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.