2014-04-12 15:55:24

குருத்து ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 உலகின் மிகப்பெரும் குடியரசின் மக்கள் தங்கள் கைவசம் உள்ள ஒரே ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆம், ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி முடிய இந்தியாவின் எதிர்கால வரலாற்றை மக்கள் எழுதி வருகின்றனர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல், இம்முறை, பல்வேறு எதிர்பார்ப்புக்கள், ஐயங்கள், அச்சங்கள் மத்தியில் நடைபெற்று வருகின்றது.
கடந்த சில மாதங்களாக, இந்தியாவில் கூட்டங்களும், ஊர்வலங்களுமாய் நாடு ஒலி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. தேர்வுகளை எழுதும் இளையோர், குழந்தைகள், வயதில் முதிர்ந்தோர், நோயுற்றோர் என்று பலரின் தேவைகளைப்பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல், அரசியல் தலைவர்கள் நடத்திய கூட்டங்களும், கூச்சல்களும் தற்போது ஓரளவு அடங்கியுள்ளன.

பெரும்பாலான அரசியல் கூட்டங்களும், ஊர்வலங்களும் ஒருவரது பெருமையை, சக்தியைப் பறைசாற்ற மேற்கொள்ளப்படும் செயற்கையான முயற்சிகளே. இவற்றிற்கு முற்றிலும் மாறாக, 2011ம் ஆண்டு, புது டில்லியில் ஏப்ரல் 5ம் தேதி ஒரு முயற்சி ஆரம்பமானது. இந்தியச் சமுதாயத்தின் கழுத்தை ஒரு கருநாகமாய்ச் சுற்றி நெரித்துக் கொண்டிருக்கும் ஊழலைக் கேள்விகேட்க, கட்டுப்படுத்த Jan Lokpal மசோதா, சட்டமாக்கப்பட வேண்டுமென்று, 72 வயதான Anna Hazare அவர்கள், புது டில்லியில் ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரதம் என்ற போராட்டம் பல இலட்சம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அறிக்கைகளும், விளம்பரங்களும் அதிகமின்றி திரண்ட இந்த மக்கள் ஆதரவு, மத்திய அரசை ஆட்டிப்படைத்தது. உயர்ந்ததொரு நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்திலும், அதைத் தொடர்ந்து உருவான மக்கள் இயக்கத்திலும், இப்போது அரசியல் கலந்துவிட்டதைக் காணும்போது மனம் வேதனைப்படுகிறது.

இதே 2011ம் ஆண்டில், எந்த முன்னேற்பாடும், முன்னறிவிப்பும் இல்லாமல் திரண்ட மக்கள் சக்தியை, மக்களின் விடுதலை வேட்கையை, நாடுகள் பலவும் கண்டன. துனிசியாவில் ஆரம்பமான இந்தப் புரட்சியை ஊடகங்கள் 'முல்லைப் புரட்சி' (Jasmine Revolution) என்று பெயரிட்டன. இந்தப் புரட்சி, பின்னர், எகிப்து, லிபியா என்று பல நாடுகளில் பரவியது. மக்கள் சக்தியை உணர்த்திய இக்கூட்டங்கள், மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்தன. அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தின. இத்தகைய ஒரு கூட்டம், ஓர் ஊர்வலம், இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர், எருசலேம் நகரில் நடந்தது. அந்த ஊர்வலத்தை நாம் குருத்து ஞாயிறென்று கொண்டாடுகிறோம்.

இன்று நாம் கொண்டாடும் குருத்து ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: குருத்து ஞாயிறு சூறாவளி 1920 (The Palm Sunday Tornado 1920). அமெரிக்காவின் Georgia, Indiana, Ohio பகுதிகளில் 1920ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, குருத்து ஞாயிறன்று உருவான சூறாவளிக்காற்று, மழை, புயல் இவற்றால் பல கட்டிடங்களும், மரங்களும் சாய்ந்தன. ஏறக்குறைய 400 பேர் இறந்தனர். 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மார்ச் முதல், ஜூன் முடிய உள்ள நான்கு மாதங்களில் அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்தி சூறாவளிகள். சூறாவளி தாக்கும் மாதங்களில் தான் குருத்து ஞாயிறும் கொண்டாடப்படுகிறது. குருத்து ஞாயிறு... சூறாவளி... இவை இரண்டையும் இணைத்துச் சிந்திப்பது, பொருளுள்ளதாகத் தெரிகிறது. முதல் குருத்து ஞாயிறு நடந்தபோது, சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. இயற்கை உருவாக்கிய சூறாவளி அல்ல, இயேசு என்ற ஓர் இளையப் போதகரின் வடிவில் எருசலேமுக்குள் நுழைந்த சூறாவளி. சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், மரங்களை, வீடுகளை அடியோடு பெயர்த்து, வேறு இடங்களில் சேர்க்கும், அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும்.

இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, முதல் குருத்து ஞாயிறு நிகழ்வுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றின என்பதை உணரலாம். இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களுக்கு எல்லாமே தலைகீழாக மாறியது போல் இருந்தது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம் இந்தக் குருத்தோலை ஊர்வலம். இதைத் தொடர்ந்து, இயேசு அந்த மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அமைப்பையும் தலைகீழாக்கினார். எனவே, இந்தக் குருத்து ஞாயிறு அதிகார அமைப்புகளைப் பல வழிகளிலும் புரட்டிப்போட்ட ஒரு சூறாவளிதானே!

போட்டிகளில், போரில் வெற்றிபெற்று வரும் வீரர்களுக்கு குருத்தோலை வழங்குவது உரோமையர்களின் பழக்கம். யூதர்கள் மத்தியிலோ சமாதானத்தை, நிறைவான வளத்தைக் குறிக்கும் ஓர் அடையாளம் குருத்தோலை. வெற்றி, அமைதி, நிறைவு எல்லாவற்றையும் குறிக்கும் ஓர் உருவமாக இயேசு எருசலேமில் நுழைந்தார்.
வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள், வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் வெற்றிபெற்றது ஒரு போட்டியின் வழியாக, போரின் வழியாக. போட்டியில் ஒருவர் வெற்றிபெற்றால், மற்றவர்கள் தோற்க வேண்டும். பிறரது தோல்வியில் தான் இந்த வெற்றிக்கு அர்த்தமே இருக்கும். போர்க்களத்தில் கிடைக்கும் வெற்றிக்கு, பல்லாயிரம் உயிர்கள் பலியாகவேண்டும்.

போட்டியின்றி, போரின்றி அனைவருக்கும் வெற்றியைப் பெற்றுத்தரும் மன்னன், வீரன் இயேசு. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள் வரலாற்றில் புகழோடு வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆனால் இந்த ஓர் இளைஞனோ வாழ்ந்தார். மறையவில்லை. இன்னும் வாழ்கிறார். இனியும் வாழ்வார். இந்தக் கருத்துக்களை நான் சொல்லவில்லை, ஒரு பேரரசர் சொல்லியிருக்கிறார். ஆம் அன்பர்களே, வரலாற்றில் புகழுடன் வாழ்ந்து மறைந்த பேரரசன் நெப்போலியன் போனபார்ட் அவர்கள், இயேசுவைப் பற்றி சொன்ன கூற்று சிந்திக்க வேண்டியதொன்று:
"மனிதர்களை எனக்குத் தெரியும். இயேசு சாதாரண மனிதர் அல்ல. அலெக்சாண்டர், சீசர், சார்ல்மேய்ன் (Charlesmagne), நான்... இப்படி பலரும் பேரரசுகளை உருவாக்கியிருக்கிறோம். இவற்றை உருவாக்க நாங்கள் படைபலத்தை நம்பினோம். ஆனால், இயேசு அன்பின் பலத்தை நம்பி தன் அரசை உருவாக்கினார். இத்தனை நூற்றாண்டுகள் ஆன பிறகும், அவருக்காக உயிர் துறக்க கோடிக்கணக்கானோர் இன்னும் இருக்கின்றனர்."
ஒரு பேரரசர் மற்றொரு பேரரசரைப் பற்றி இவ்வளவு உயர்வாகப் பேசியுள்ளது வியப்புக்குரியதுதான். வரலாற்றில் கத்தியோடு, இரத்தத்தோடு உருவான பல ஆயிரம் அரசுகள் இன்று நமது வலாற்று ஏடுகளில் மட்டுமே உள்ளன. அந்த அரசர்களுக்கும் அதே கதிதான். ஆனால், கத்தியின்றி, மற்றவரின் இரத்தமின்றி, அதேநேரம், தன் இரத்தத்தால், இயேசு என்ற மன்னன் உருவாக்கிய இந்த அரசு மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறது. இந்த அரசைப் பறைசாற்ற திருஅவை நமக்கு அளித்துள்ள ஒரு வாய்ப்பு இந்த குருத்து ஞாயிறு.

இறுதியாக ஒரு சிந்தனை: ஏப்ரல் 14, இத்திங்களன்று, தமிழ் புத்தாண்டு நாளைக் கொண்டாடுகிறோம். புத்தாண்டு நாளன்று வாக்குறுதிகள் எடுப்பது பல கலாச்சாரங்களிலும் காணப்படும் வழக்கம். ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்வை மேம்படுத்த எடுக்கப்படும் வாக்குறுதிகள் இவை. தனிப்பட்ட வாழ்வை மட்டுமல்ல, சமுதாய வாழ்வையும் மேம்படுத்த, கனவுகள் தேவை, கனவுகளை நனவாக்க மனஉறுதியுடன் கூடிய வாக்குறுதிகள் தேவை.
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், இவ்வுலகிற்கும் தேவையான கனவை, வாக்குறுதியாக முழங்கிச் சென்றுள்ளார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அவர் முழங்கிய வாக்குறுதி இதோ:
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்...
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது எனும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
(பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்)

பாரதிதாசனின் இவ்வரிகளை இன்று எண்ணிப்பார்க்க ஒரு முக்கியக் காரணம் உண்டு. உலகின் பல நாடுகளில், ஏப்ரல் 14, இத்திங்களன்று, ஓர் உலக நாள் கடைபிடிக்கப்படுகின்றது. "இராணுவச் செலவை எதிர்க்கும் நாள்" உலகின் பல நாடுகளில் கடைபிடிக்கப்படுகின்றது. Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற ஆய்வு நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் இராணுவச் செலவைக் குறித்தப் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. 2012ம் ஆண்டு உலக நாடுகள் இராணுவத்திற்கு செலவிட்ட மொத்தத் தொகை... 1,75,300 கோடி டாலர்கள். அதாவது, 1,05,18,000 கோடி ரூபாய். இத்தொகையின் பிரம்மாண்டத்தை வெறும் பூஜ்யங்களாகப் பார்ப்பதற்குப் பதிலாக, இத்தொகையைக் கொண்டு வேறு என்ன செய்யமுடியும் என்று சிந்தித்தால், நம் உலக அரசுகளின் மதியற்ற இராணுவ வெறியைப் புரிந்துகொள்ள முடியும்.
2012ம் ஆண்டில் இராணுவத்திற்கு உலக நாடுகள் செலவிட்டத் தொகையை உலகில் உள்ள மனிதர்களுக்குப் பிரித்துக்கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் 279 டாலர்கள், அதாவது, 16,740 ரூபாய் கிடைக்கும். இத்தகைய நிதி உதவி கிடைத்தால், அனைவரும் பாதுகாப்பு உணர்வுடன் வாழமுடியும். உலகில் போர் என்ற எண்ணமே எழாது... இல்லையா?

குருத்து ஞாயிறு, அதைத் தொடரும் தமிழ் புத்தாண்டு நாள், அதே நாளில் கடைபிடிக்கப்படும் "இராணுவச் செலவை எதிர்க்கும் நாள்" ஆகிய அனைத்து எண்ணங்களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்கும்போது, அமைதியின் மன்னன் இயேசு எருசலேமில் நுழைவதை குறித்து இறைவாக்குரைத்த செக்கரியாவின் வார்த்தைகள் நம் எண்ணங்களில் எதிரொலிக்கின்றன:
இறைவாக்கினர் செக்கரியா 9: 9-10
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

போர்க்கருவிகள் எல்லாம் அழிக்கப்பட்டு, போரே இல்லாமல் போகும் புத்தம் புது பூமி ஒன்று உருவாக நாம் இப்போது கனவுகள் கண்டு வருகிறோம். இதே கனவுகள் அன்றும் காணப்பட்டன. அந்தக் கனவை நனவாக்க இறைமகன் இயேசு எருசலேமில் நுழைந்தார். இன்று மீண்டும் அவர் அமைதியின் அரசராய் நாம் வாழும் இல்லங்களில், ஊர்களில், நகரங்களில், இந்த உலகத்தில் நுழைய வேண்டுவோம்.
சிறப்பாக, தங்கள் எதிர்காலம் வளமாக அமையவேண்டும் என்ற கனவோடு, தகுதியானத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களின் கனவுகள் நனவாகவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். அத்துடன், ஒவ்வொரு குருத்து ஞாயிறன்றும் கத்தோலிக்கத் திருஅவை உலக இளையோர் நாளைக் கொண்டாடுகிறது. போரற்ற புத்தம் புது பூமியை உருவாக்கும் முக்கியச் சிற்பிகள் இளையோர் என்பதால், அவர்களை இறைவன் இன்று சிறப்பாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.