2014-04-11 16:27:41

திருத்தந்தை பிரான்சிஸ் : 21ம் நூற்றாண்டில் தீயவன் இருக்கிறான், சோதனைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்


ஏப்.11,2013. நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில் சாத்தான் இருக்கிறான், நமக்கு வருகின்ற சோதனைகளுக்கு எதிராக எப்படி போராடுவது என்பதை நற்செய்தியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமது சோதனைகள் குறித்து நாம் விழிப்பாய் இருக்க வேண்டுமென்றும், தொடக்கத்திலேயே சோதனைக்கு நம்மை உட்படுத்தினால் அது மற்றவர்களுக்கும் பரவி அதை நியாயப்படுத்தும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசு தமது வாழ்வில் தீயவனுக்கும், அவனது சோதனைகளுக்கும் எதிராக எவ்வாறு போராட வேண்டியிருந்ததோ அவ்வாறே, ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்வும் தீமைக்கு எதிரான தொடர் போராட்டமாக அமைந்துள்ளது என்றும் தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமது ஆன்மீக வாழ்வு மற்றும் நமது கிறிஸ்தவ வாழ்வின் சட்டம், போராட்டமாக இருப்பதால் நாம் அனைவரும் சோதிக்கப்படுகிறோம் எனவும், இவ்வுலகின் இளவரசனான சாத்தான் நமது தூய்மையான வாழ்வையும், நாம் கிறிஸ்துவைப் பின்செல்வதையும் விரும்பவில்லை எனவும் கூறினார் திருத்தந்தை,
மேலும், இறைவனில் வைக்கும் நம்பிக்கை மட்டுமே, சந்தேகங்களை உறுதியான உண்மைகளாகவும், தீமையை நன்மையாகவும், இரவை ஒளிரும் விடியலாகவும் மாற்றும் என, இவ்வெள்ளியன்று தனது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.