2014-04-11 16:27:33

சிறாரைப் பாலியலுக்குப் பயன்படுத்திய அருள்பணியாளர்களுக்காக மன்னிப்புக் கேட்கிறேன், திருத்தந்தை பிரான்சிஸ்


ஏப்.11,2013. உலகிலுள்ள எல்லா அருள்பணியாளர்களுடன் ஒப்பிடும்போது, மிகச் சிறிய எண்ணிக்கையிலுள்ள அருள்பணியாளர்களால் சிறாருக்கு இழைக்கப்பட்டுள்ள பாலியல் முறைகேடுகள் உட்பட்ட அனைத்துத் தீமைகளையும் என் தோள்மீது சுமக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து, அத்தீமைகளுக்காக, தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் சில மனிதர்களால் இழைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட மற்றும் அறநெறிப் பாதிப்புக்களைத் திருஅவை அறிந்தே இருப்பதாகவும், இப்பிரச்சனை குறித்தும், அத்தீமைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்தும் திருஅவை எடுத்துவரும் நடவடிக்கைகளில் ஓர் அடிகூட பின்வாங்காது எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்கு மாறாக, திருஅவை இன்னும் கடுமையாகக்கூடச் செயல்படும் எனவும், ஏனெனில் சிறாரின் வாழ்வில் எவரும் தலையிட முடியாது எனவும் கூறினார்.
பாரிஸ் நகரை மையமாகக் கொண்டு செயல்படும், BICE என்ற அனைத்துலக கத்தோலிக்க குழந்தைநல அமைப்பின் தலைவர், செயலர் என எட்டு முக்கிய உறுப்பினர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
சிறார் மற்றும் இளையோரைப் பரிசோதனைப் பொருள்களாகப் பயன்படுத்தும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் தான் புறக்கணிப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, தங்கள் பிள்ளைகளுக்கு நன்னெறி மற்றும் சமயக்கல்வியை வழங்குவதற்குப் பெற்றோருக்கும் இருக்கும் உரிமைக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.
சிறாரின் ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சிக்கு உதவும், ஒரு தந்தை மற்றும் ஒரு தாயைக் கொண்டுள்ள குடும்பச் சூழலில் வளர்வதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அடிமைத் தொழில், படைப்பிரிவில் சேர்க்கப்படல் உட்பட சிறாருக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து வன்முறைகளுக்கும் எதிரான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது இக்காலத்தில் மிகவும் இன்றியமையாதது என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.