2014-04-10 16:25:31

இளையோர் உலக நாள் ஏற்பாடுகள் குறித்து, உரோம் நகரில், 90 நாடுகளைச் சேர்ந்த இளையோர் சந்திப்பு


ஏப்.10,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பொருத்தவரை, எதிர்காலத்தை இவ்வுலகிற்குக் கொணரும் சன்னல்களாக விளங்குபவர்கள் இளையோர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
சென்ற ஆண்டு பிரேசில் நாட்டில் நிகழ்ந்த உலக இளையோர் நாளை ஏற்பாடு செய்திருந்த குழுவுக்கும், 2016ம் ஆண்டு, போலந்து நாட்டின் Krakow நகரில் அடுத்த உலக இளையோர் நாளை ஏற்பாடு செய்துவரும் குழுவுக்கும் இடையே, உரோம் நகரில் ஏப்ரல் 10 இவ்வியாழன் முதல் ஏப்ரல் 13 வருகிற ஞாயிறு முடிய கூட்டம் ஒன்றை, திருப்பீட பொதுநிலையினர் அவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அவையின் தலைவரான கர்தினால் Stanislaw Rylko அவர்கள், இக்கூட்டத்தின் துவக்க அமர்வில் உரையாற்றியபோது, பிரேசில் மற்றும் போலந்து நாடுகளிலிருந்து வந்திருந்த அனைத்து உறுப்பினர்களையும், குறிப்பாக, ரியோ தே ஜனெய்ரோ பேராயர், கர்தினால் Orani João Tempesta அவர்களையும், Krakow பேராயர் கர்தினால் Stanislaw Dziwisz அவர்களையும் வரவேற்றார்.
புனிதராக உயர்த்தப்படவிருக்கும் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் தலைமையில், 1991ம் ஆண்டு போலந்து நாட்டில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளை நினைவுகூர்ந்த கர்தினால் Rylko அவர்கள், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் போலந்து நாட்டில் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறுவது குறித்து மகிழ்வு தெரிவித்தார்.
2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்துள்ள மையக் கருத்து, இயேசுவின் பேறுபெற்றோர் வரிசையில் இடம்பெறும், "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவார்" என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Rylko அவர்கள், இறை இரக்கம் என்பது திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் வாழ்வை இயக்கிய ஒரு சக்தியாக அமைந்தது என்பதையும் எடுத்துரைத்தார்.
ஏப்ரல் 10 முதல் 13 முடிய, உரோம் நகரின் Saxon என்ற இடத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் 90 நாடுகளைச் சேர்ந்த பல நூறு இளையோர் கலந்துகொள்கின்றனர். இவர்கள் அனைவரும், ஏப்ரல் 13, குருத்தோலை ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் புனித பேதுரு வளாகத்தில் கொண்டாடப்படும் இளையோர் நாள் திருப்பலியில் கலந்துகொள்வர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.