2014-04-09 16:21:20

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஏப்ரல்09,2014. திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகத்திற்கு செவிமடுக்க வந்திருந்த விசுவாசிகள் மற்றும் திருப்பயணிகள் கூட்டம் தூய பேதுரு வளாகத்தை நிறைத்து, இதமான வெப்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்க, தூய ஆவியின் கொடைகள் குறித்து தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த பல வாரங்களாக திருஅவையின் அருளடையாளங்கள் குறித்து மறைக்கல்வி போதனைகளை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் தூய ஆவியின் கொடைகள் குறித்த புதிய தொடரை துவக்கினார்.
அன்பு சகோதர சகோதரிகளே! இன்று நாம் தூய ஆவியின் கொடைகள் குறித்த மறைக்கல்வித் தொடரை ஆரம்பிக்கிறோம். தூய ஆவியே இறைவனின் கொடைதான். நம் இதயங்களிலும் திருஅவையிலும் கடவுளின் அன்பின் பிரசன்னமாக, இருப்பாக தூய ஆவி உள்ளார். இறைவாக்குரைஞர் எசாயாவின் மீட்பு தொடர்புடைய முன்னறிவிப்பின் அடிப்படையில் திருஅவையானது ஏழு கொடைகளை, தூய ஆவியால் வழங்கப்படுபவைகளாகப் பாரம்பரியமாக அடையாளம் கண்டுள்ளது. அவையாவன, ஞானம், புரிதல், ஆலோசனை, உளவலிமை(திடன்) அறிவு, பக்தி மற்றும் இறைஅச்சம். இதில் முதலில் வருவது ஞானம். ஆன்மீகக் கொடையான இந்த ஞானம், ஓர் உள்ளொளியாகும். இந்த உள்ளொளியானது அனைத்துப் பொருட்களையும் இறைவனின் கண்ணோட்டத்தில் கண்டு தியானிக்கவும், தூய ஆவியின் தூண்டுதலுக்கு வசப்படுகின்ற இதயத்தைக் கொண்டிருக்கவும் நமக்கு உதவும் அருளாகும். செபம் மற்றும் அன்பின் ஒன்றிப்பிலிருந்து கிட்டும் இறைநெருக்கத்தால் பிறந்த ஞானம் எனும் இந்த அருள், அனைத்துப்பொருட்களுக்குமான இறைத்திட்டத்தை மகிழ்வுநிறை நன்றியுடன் கண்டுகொள்ள நமக்கு உதவுகிறது. ஆகவே கிறிஸ்தவ ஞானம் என்பது, இறைவனைப்பற்றிய, இயற்கைக்கு அப்பாற்பட்ட சுவையின் கனியாகும். நம்மைச் சுற்றியிருக்கும் இறைவனின் இருப்பையும், அன்பையும் நன்மைத்தனத்தையும் சுவைக்கும் திறனே கிறிஸ்தவ ஞானம். இன்று அத்தகைய ஞானத்திற்கான சாட்சியம் இவ்வுலகிற்கு அதிகம் அதிகமாகத் தேவைப்படுகிறது. இறைவனின் மீட்பளிக்கும் அன்புச்சக்திக்கும் அவர் ஞானத்திற்கும் நம்மை வெளிப்படையாகத் திறப்பதன் மூலம் இறைவனின் உண்மை மக்களாக தூய ஆவியில் மகிழ உதவும் வண்ணம் ஞானம் எனும் இந்த கொடைக்காகச் செபிப்போம். இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வாரம் திங்களன்று சிரியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இயேசுசபை அருட்பணியாளர் குறித்து தன் கவலையை வெளியிட்டு அந்நாட்டின் அமைதிக்கான செபத்திற்கும் அழைப்புவிடுத்தார்.
கடந்த திங்களன்று சிரியாவின் ஹோம்ஸ் நகரில் என் உடன் சகோதரர், 75 வயதான டச்சு நாட்டு இயேசு சபை அருட்தந்தை ஃபிரான்ஸ் வான் தெர் லுக்ட் கொலைச் செய்யப்பட்டுள்ளார். சிரியாவில் பணியாற்ற 50 ஆண்டுகளுக்கு முன்னர் சென்ற இவர் எப்போதும் அனைவருக்கும் நன்றியுணர்வுடனும் அன்புடனும் நன்மைகளையே ஆற்றிவந்தார். இதனால் இவர் கிறிஸ்தவர்களாலும் இஸ்லாமியர்களாலும் மதிக்கப்பட்டு அன்புகூரப்பட்டார். கொடூரமான முறையில் இடம்பெற்ற இவரின் மரணம் என்னை வேதனைக்குள்ளாக்கியுள்ளதோடு, அழிவையும் மரணத்தையும் தொடர்ந்து அறுவடைச்செய்துவரும் இரத்தம் சிந்தும் மோதல்கள் இடம்பெறும் இந்நாட்டில் துன்பங்களையும் மரணத்தையும் சந்தித்துவரும் மக்கள் குறித்து ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கிறது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சிரியா நாட்டவர், வெளிநாட்டவர், குருக்கள், ஆயர்கள் என அந்நாட்டில் கடத்திவைக்கப்பட்டிருப்போரை இவ்வேளையில் சிறப்பான விதத்தில் நினைவு கூர்ந்து, அவர்கள் தங்கள் அன்புநிறைமக்களுடனும் குடும்பங்களுடனும் ஒன்றிணைய உதவுமாறு இறைவனை நோக்கி வேண்டும்படி கேட்கிறேன். சிரியாவின் அமைதிக்காகச் செபிக்கும்படி உங்களை வேண்டுவதோடு சிரியாவிற்கும் அனைத்துலகச் சமுதாயத்திற்கும் விண்ணப்பம் ஒன்றையும் முன்வைக்கிறேன். ஆயுதங்கள் மௌனமாகட்டும், வன்முறை முடிவுக்கு வரட்டும். போரோ அழிவோ இனிமேல் வேண்டாம். மனிதபிமானச் சட்டங்களை மதிப்பதன் வழி, உதவித் தேவைப்படும் மக்கள் மீது நம் அக்கறையைக் காட்டுவோம். நாம் விரும்பும் அமைதியைப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்புரவு மூலம் பெறுவோம்.
இவ்வாறு அழைப்பு விடுத்து தன் புதன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.