2014-04-09 16:24:58

கர்தினால் மூன்றாம் எம்மானுவேல் டெல்லி அவர்கள் மறைவுக்கு திருத்தந்தையின் தந்தி


ஏப்.09,2014. பாபிலோனியத் திருஅவையின் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கர்தினால் மூன்றாம் எம்மானுவேல் டெல்லி அவர்கள் ஏப்ரல் 9, இப்புதன் காலை, இறைவனடி சேர்ந்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அனுதாபத்தைத் தெரிவித்து தந்தியோன்றை அனுப்பியுள்ளார்.
கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை லூயில் சாக்கோ அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள இத்தந்தியில், மத நம்பிக்கை கொண்ட அனைத்து குழுக்கள் மீதும் மதிப்பு கொண்டு, அவர்களுடன் உரையாடலை வளர்க்கப் பாடுபட்ட முதுபெரும் தந்தை கர்தினால் டெல்லி அவர்களின் மறைவுக்கு தன் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
1927ம் ஆண்டு, செப்டம்பர் 27ம் தேதி பிறந்த கர்தினால் டெல்லி அவர்கள், உரோம் நகரின் உர்பானியா, மற்றும் லாத்தரன் பல்கலைக் கழகங்களில் பயின்று, 1952ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 1963ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1963ம் ஆண்டு துவங்கிய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பங்கேற்ற கர்தினால் டெல்லி அவர்கள், ஏப்ரல் 9, இப்புதன் காலை, அமெரிக்காவின் சான் தியெகோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில், தன் 87வது வயதில் இறையடி சேர்ந்தார்.
கர்தினால் மூன்றாம் எம்மானுவேல் டெல்லி அவரகளின் மறைவையடுத்து, திருஅவையில், கர்தினால்களின் எண்ணிக்கை 216ஆகக் குறைந்துள்ளது. இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றோரின் எண்ணிக்கை 120.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.