2014-04-09 16:26:58

உயிர்களைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபடும் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டோம் - பிலிப்பின்ஸ் நாட்டு ஆயர்கள்


ஏப்.09,2014. மக்கள் தொகை பெருக்கம் குறித்து பிலிப்பின்ஸ் அரசு இயற்றிய சட்டத்திற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் ஆதரவு தெரிவித்து வழங்கியுள்ள தீர்ப்பை தாங்கள் ஏற்கும் அதே வேளையில், உயிர்களைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபடும் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று பிலிப்பின்ஸ் நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
மக்கள்தொகை பெருக்கம் தொடர்பாக, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பிலிப்பின்ஸ் அரசு வெளியிட்ட சட்டத்தில் ஒரு சில பரிந்துரைகள் வழங்கி, அந்நாட்டு உச்ச நீதி மன்றம் இச்செவ்வாயன்று வழங்கிய தீர்ப்பைக் குறித்து, பிலிப்பீன்ஸ் ஆயர்கள் பேரவைத் தலைவர் பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
அரசின் இச்சட்டத்தை ஆதரிக்கும் உச்ச நீதி மன்றம், அதே நேரம், மனசாட்சியின் அடிப்படையில் இதற்கு உடன்படாதவர்களையும் காக்கும் வண்ணம் தீர்ப்பு வழங்கியுள்ளது நிறைவு தருகிறது என்று பேராயர் வியேகாஸ் அவர்கள் கூறினார்.
கடந்த ஈராயிரம் ஆண்டுகள் பல்வேறு எதிர்ப்புக்கள், அடக்கு முறைகள் போன்ற பிரச்சனைகள் மத்தியில் தன் மதிப்பீடுகளை இழக்காமல் வாழ்ந்துவரும் திருஅவை, பிலிப்பின்ஸ் அரசின் இந்த அடக்குமுறை சட்டத்தையும் தகுந்த வகையில் சந்திக்கும் என்று பேராயர் வியேகாஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : AsiaNews / Fides








All the contents on this site are copyrighted ©.